போயஸ் கார்டன் இல்லத்துக்குள் கணவருடன் நுழைந்தார் ஜெ.தீபா! ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும் என பேட்டி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் நீதிமன்ற உத்தரவின்படி தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தீபா தனது கணவருடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
போயஸ் தோட்டத்திலுள்ள வேதா நிலைய இல்லத்தை ‘அரசுடைமையாக்கியது செல்லாது’ என்ற நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அந்த இல்லத்தின் சாவியை விரைந்து தங்களிடம் ஒப்படைக்குமாறு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக் மற்றும் ஜெ.தீபா, சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இவர்களின் கோரிக்கைக்கு, அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், போயஸ் கார்டனிலுள்ள ஜெயலலிதா இல்லத்தின் சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று ஒப்படைத்தார்.
இதையடுத்து தனது கணவர் மாதவனுடன் போயஸ் கார்டன் இல்லத்துக்குள் நுழைந்த தீபா தனது அத்தை ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
அப்போது தீபாவின் சகோதரர் தீபக்கும் உடனிருந்தார். பின்னர் வீடு முழுவதும் வலம் வந்த தீபா மாடியில் நின்று கொண்டு உற்சாகமாக கையசைத்தார்.
வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ள்தாக குறிப்பிட்ட தீபா, வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் எனவும் தெரிவித்தார்.