விவாகரத்து கேட்டு நள்ளிரவில் கணவர் துன்புறுத்தல்! ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கதறல்... கணவர் விளக்கம்
மாதவன் தன்னிடம் விவாகரத்து கேட்டு துன்புறுத்துவதாக கூறும் ஜெ.தீபா
அவரின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து கணவர் மாதவன் அளித்துள்ள விளக்கம்
கணவர் தன்னிடம் இருந்து விவாகரத்து கேட்டு துன்புறுத்துவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வேதனை தெரிவித்த நிலையில் அந்த தகவலை அவர் கணவர் மாதவன் மறுத்துள்ளார்.
ஜெ. தீபா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து தனது கணவர் மாதவன் தன்னை பிரிந்துவிடுவதாகக்கூறி துன்புறுத்துவதாகவும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதாவது, கடந்த ஆறு மாதங்களாக மாதவன் என்னுடன் பிரச்சனை செய்கிறார். திடீரென, அவரைவிட்டு பிரிந்துபோக சொல்கிறார். ஈவு இரக்கம் இல்லாமல் நள்ளிரவில் எழுப்பி சண்டையிடுகிறார் என தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஆறு மாதமாக, எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நரம்புப் பிரச்சனை உள்ளது. மருந்துகள் எடுப்பதால் அடிக்கடி சுயநினைவில்லாமல் போய்விடுகிறேன். உடம்பு சரியில்லாத சூழலில் மாதவனைத் தவிர்த்து, என்னைப் பார்த்துக்க யாருமே கிடையாது.
அதனால, மாதவன் இதையே அட்வான்டேஜாக எடுத்து சண்டை போடுவதாக தெரிவித்திருந்தார். இது குறித்து விளக்கமளித்த மாதவன், தீபா என்னை பற்றி கூறியதை மறுக்கிறேன்.
அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்பத் தகராறுதான். அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன். அவர்மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.