215 கோடி மிரட்டி பறித்த வழக்கில் பிரபல இலங்கை நடிகை குற்றவாளி! அமலாக்கத்துறை அறிவிப்பு
215 கோடி பணம் பறித்த வழக்கில் இலங்கையைச் சேர்ந்த இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி
ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் கொடுத்ததாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது
தொழிலதிபர் மனைவியை மிரட்டி 215 கோடி பணம் பறித்த வழக்கில், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி என அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணம் ஈட்டியதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம் மற்றும் 82.5 லட்சம் ரொக்கம், 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
PC: Instagram.com/jacquelinef143
பல தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது புகார்கள் இருந்த நிலையில், சிறையில் இருந்தவாறே அவர் தொழிலதிபர் ஒருவரின் மனைவியை ஏமாற்றி 200 கோடி மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள், சுகேஷ் சந்திரசேகரின் காதலி லீனா மரியா மற்றும் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தொழிலதிபரை மிரட்டி 215 கோடி பணம் பறித்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி என அமலாக்கத்துறை குறிப்பிட்டது. அத்துடன் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.
PC: Twitter