மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா! அணியை காப்பாற்றிய ஜடேஜா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா 77 ஓட்டங்கள் விளாசினார்.
சரிந்த விக்கெட்டுகள்
பிரிஸ்பேனில் நடந்து வரும் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடி வருகிறது.
கே.எல் ராகுல் மட்டும் நின்று ஆட யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4), கில் (1), கோஹ்லி (3), ரிஷாப் பண்ட் (9) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணித்தலைவர் ரோஹித் ஷர்மா அணியை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 ஓட்டங்களில் கம்மின்ஸ் ஓவரில் அவுட் ஆனார். கடந்த டெஸ்டிலும் சொதப்பிய ரோஹித் சொற்ப ஓட்டங்களில் மீண்டும் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.
கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா அரைசதம்
அடுத்து கே.எல்.ராகுல் 84 ஓட்டங்களில் வெளியேற, ரவீந்திர ஜடேஜா நங்கூரம்போல் நின்று ஆடினார். அரைசதம் விளாசிய ஜடேஜா 123 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஜடேஜாவின் ஆட்டம் மூலம் இந்திய அணி 200 ஓட்டங்களை கடந்தது. கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகாஷ் தீப் அதிரடியில் மிரட்டினார். அவர் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் விளாசி களத்தில் உள்ளார்.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |