ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் சென்னை அணி: காரணம் கூறும் ஜடேஜா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்பிளேயில் சரியாக விளையாடாததே மிகப்பெரிய குறைபாடு என அணித்தலைவர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியது. இது சென்னை அணிக்கு 6வது தோல்வியாகும். இதனால் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் அந்த அணி உள்ளது.
நேற்றைய போட்டியில் சென்னை அணித்தலைவர் ஜடேஜா கடைசி கட்டத்தில் துடுப்பாட்டம் செய்தபோது பெரிய ஷாட் ஆட முயற்சிக்கவில்லை. கடைசி ஓவரின் 5வது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். 16 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 21 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து களத்தில் இருந்தார். இரண்டு ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் எதையும் சாய்க்கவில்லை. இதனால் csk ரசிகர்கள் அவர் மேல் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஜடேஜா, 'நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், இறுதியில் 10-15 ஓட்டங்கள் கூடுதலாகக் கொடுத்ததாக உணர்ந்தோம். நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. ராயுடு அருமையாக பேட்டிங் செய்தார்.
ஆனால் நான் முன்பு கூறியது போல், அவர்களை 175 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதல் 6 ஓவர்களில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை, அதுதான் எங்கள் பின்னடைவாக உள்ளது. வலுவாக மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.