டோனி பேசியது தொடர்பாக எழுந்த கடும் விமர்சனம்! அதற்கு தமிழக வீரர் கொடுத்த தரமான பதிலடி
டோனி முன்னர் பேசியது குறித்து தொடர்ந்து விமர்சித்தவர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஜெகதீசன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 13ஆவது சீசனின்போது இளம் வீரர்கள் குறித்து டோனி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 13ஆவது சீசனில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகள் பங்கேற்று 6 வெற்றிகளை மட்டும் பதிவுசெய்து, முதல்முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.
இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் சொதப்பிய மூத்த வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில், 13ஆவது சீசனில் இறுதிக்கட்டத்தில் பேசிய டோனி, சில இளம் வீரர்களிடம் ஸ்பார்க்கை நாங்கள் பார்க்கவில்லை. அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.
அவர்களை அழுத்தங்கள் இன்றி விளையாட வைக்க விரும்புகிறோம் என்றார். இது கடும் விமர்சனங்களைப் பெற்றுக்கொடுத்தது.
அது எப்படி இளம் வீரர்களை விளையாட வைக்காமல் டோனி இப்படிச் சொல்லலாம் என பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரான தமிழன் ஜெகதீசன், டோனி கூறியதை தவறாக புரிந்துகொண்டனர். அணியில் பல மூத்த வீரர்கள் இருந்தார்கள்.
அவர்கள் ஒருசில போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் உடனே நீக்கவிட முடியாது. அவர்களால் தவறுகளைத் திருத்திக்கொண்டு சிறப்பாக விளையாட முடியும். விமர்சனங்கள் எழுந்த பிறகு, வீரர்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டனர்.
நெருக்கடியான நேரத்தில் அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்து நாங்கள் மனதளவில் தயாராகி வருகிறோம். வாய்ப்பு வரும்போது சிறப்பாக விளையாட இது உதவும். டோனியின் திட்டமும் இதுதான் என கூறியுள்ளார்.