ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்பானியை விட பணக்காரராக ஆசை! சந்திரபாபு நாயுடு விமர்சனம்
ஜெகன் மோகன் ரெட்டியை கொலம்பிய போதைப்பொருள் டான் உடன் ஒப்பிட்டு சந்திரபாபு நாயுடு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகன் போராட்டம்
ஆந்திர பிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், "ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஆளும் கட்சி செயல்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான லோகேஷ் ‘ரெட் புக்’ கில் உள்ள எதிர்க்கட்சியினரை பழி வாங்குவேன் என்று கூறுகிறார். நாங்கள் ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் இதுபோல நடக்கவில்லை.
கடந்த 45 நாட்களில் எங்கள் கட்சியைச் சேர்ந்த 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
சந்திரபாபு நாயுடு பேசியது
ஜெகன்மோகன் ரெட்டிக்கு பதிலளிக்கும் விதமாக சட்டமன்றத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது, வழக்குகள் உள்ளவர்கள் எழுந்து நில்லுங்கள் சொன்னதும் சட்டமன்றத்தில் 80 சதவீதம் மேல் எம்எல்ஏக்கள் எழுந்து நின்றனர்.
கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை சுட்டிக்காட்டவே எழுந்து நிற்க கூறினேன்" என்றார். இதற்கு சட்டமன்றத்தில் சிரிப்பலைகள் எழுந்தன
. மேலும் ஜெகன் மோகன் ரெட்டியை கொலம்பிய போதைப்பொருள் டான் உடன் ஒப்பிட்டும் பேசினார். அப்போது, "பாப்லோ எஸ்கோபர் ஒரு கொலம்பிய போதைப்பொருள் டான்.
இவர் பின்னாளில் அரசியல்வாதியாக மாறிய பின்னரும் போதைப்பொருள் விற்றுவந்தார். 1970 -ம் ஆண்டு காலகட்டத்திலேயே 30 பில்லியன் டொலர்கள் சம்பாதித்தார். இப்போது அதன் மதிப்பு 90 பில்லியன் டொலர்கள். அதன்பிறகு 1976-ல் கைது செய்யப்பட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு டாடா, ரிலையன்ஸ், அம்பானியைவிட பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிலருக்கு தேவைகள் இருக்கும், சிலருக்கு பேராசை இருக்கும். இன்னும் சிலருக்கு வெறி இருக்கும். அப்படி வெறி பிடித்தவர்கள் தான் இவ்வாறு செய்வார்கள்" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |