கொல்கத்தா ஜேர்மன் தூதரகம் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜெயின் சமூகத்தினர்: பின்னணி
ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு இந்திய தம்பதியரின் குழந்தை அதிகாரிகளால் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், பிள்ளையை இந்தியாவுக்கு அனுப்பக் கோரி கொல்கத்தாவில் ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று, அதாவது ஜூலை 23ஆம் திகதி, கொல்கத்தாவில் உள்ள ஜேர்மன் தூதரகம் முன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
என்ன பிரச்சினை?
ஏழு மாதக் குழந்தையான அரிஹா தனது பெற்றோருடன் ஜேர்மனியில் வாழ்ந்துவரும்போது அவள் தாக்கப்பட்டதாகக் கூறி, ஜேர்மன் இளைஞர் நல அலுவலகம் பிள்ளையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.
அரிஹாவின் பெற்றோரான தாராவும் பவேஷ் ஷாவும் இந்தியா திரும்பிவிட்ட நிலையிலும், இப்போது இரண்டு வயதைக் கடந்துவிட்ட அரிஹா ஜேர்மனியிலேயே இருக்கிறாள்.
இந்தியக் குழந்தையை இந்தியாவுக்கு அனுப்ப வலியுறுத்தல்
அரிஹா தாக்கப்பட்டது தொடர்பாக தாரா, பவேஷ் தம்பதியர் மீது பதிவுசெய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் விலக்கிகொள்ளப்பட்ட பின்பும், ஜேர்மன் அதிகாரிகள் குழந்தையை இந்தியாவுக்கு அனுப்பவில்லை.
குழந்தையை அதன் பெற்றோர்தான் தாக்கினார்களா என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், குழந்தை மோசமாக தாக்கப்படிருந்தது உண்மை என்று கூறும் ஜேர்மன் அதிகாரிகள், அரிஹாவின் பெற்றோர் குழந்தையின் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார்கள் என்கிறார்கள்.
இந்திய அரசு அரிஹாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், நேற்று கொல்கத்தாவிலுள்ள ஜேர்மன் தூதரகம் முன் கூடிய அரிஹா சார்ந்த ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தினார்கள்.
குழந்தையை பெற்றோருடன் சேர்த்துவைக்கக் கோரி, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இதேபோல, சமீபத்தில் ஜேர்மன்வாழ் இந்தியர்கள், குழந்தை அரிஹாவை இந்தியாவுக்கு அனுப்பக் கோரி பிராங்க்பர்ட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |