கோலி, சச்சின், டிராவிட்டின் சாதனைகளை தூள் தூளாக்கிய ஜெய்ஸ்வால்!
இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.
தரம்சாலாவில் நடந்து வரும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி 218 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியில் மிரட்ட, ரோஹித் சர்மா நிதான ஆட்டத்தை கடைபிடித்தார்.
சிக்ஸர்களை தெறிக்கவிட்ட ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து களமிறங்கிய சுப்மன் கில்லும் அதிரடியில் மிரட்டினார். இதற்கிடையில் ரோஹித் சர்மா 18வது அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல சாதனைகளைப் படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த கோலியின் சாதனையை (655) ஜெய்ஸ்வால் (681) முறியடித்தார்.
இந்தப் பட்டியலில் ராகுல் டிராவிட் (602), விஜய் மஞ்சரேக்கர் (586), சுனில் கவாஸ்கர் (542) அடுத்த இடங்களில் உள்ளனர்.
அதேபோல் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அவர் 9 இன்னிங்சில் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவருக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 25 சிக்ஸர்கள் (74 இன்னிங்ஸ்) அடித்திருந்தார்.
அதேபோல் அதிவேகமாக 1000 ஓட்டங்கள் டெஸ்டில் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |