பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விலகி குடியரசாக விரும்பும் மற்றொரு நாடு: இளவரசர் வில்லியம் கேட் தம்பதியருக்கு வரவேற்பும் எதிர்ப்பும்
பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விலகி குடியரசாக மாறிய பார்படாஸ் நாட்டைத் தொடர்ந்து, தங்களுக்கு பிரித்தானிய மகாராணியார் வேண்டாம் என மற்றொரு நாடும் முடிவு செய்துள்ளது.
அந்த நாடு ஜமைக்கா!
நேற்று, பிரித்தானிய இளவரசர் வில்லியம் தன் மனைவி கேட்டுடன் ஜமைக்காவுக்குச் சென்றிருந்தார்.
ஒரு பக்கம் இளவரச தம்பதியருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்ட அதே நேரத்தில், அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன் ஒரு கூட்டம் மக்கள் எங்களுக்கு ராஜ குடும்பத்தினர் வேண்டாம் என்று கூறும் பதாகைகளுடன் திரண்டிருந்தார்கள்.
காலனி ஆதிக்கத்தின்போது, தங்கள் நாடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டவர்களுக்காக பிரித்தானிய ராஜ குடும்பம் மன்னிப்புக் கேட்கவேண்டும், இழப்பீடு வழங்கவேண்டும் என்னும் கோரிக்கைகள் பல நாடுகளில் எழத்துவங்கியுள்ளன. அவற்றில் ஜமைக்காவும் ஒன்றாகும்.
ஆக, நல்லெண்ண நடவடிக்கையாக பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவியும் வந்தாலும், அவர்கள் புறப்பட்டதுமே, மகாராணியாரை தங்கள் நாட்டின் தலைமையிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக ஜமைக்கா துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1962ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து ஜமைக்கா சுதந்திரம் பெற்ற நிலையில், சுதந்திரம் பெற்ற 60ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் ஆகத்து மாதம் 6ஆம் திகதி அன்றே, ஜமைக்கா குடியரசாகத் திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.