அறிமுகப் போட்டியிலேயே 4 பந்தில் 4 விக்கெட் - கிரிக்கெட்டுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜம்ஷெட் ஆலம்
jamshed alam took 4 wickets in 4 balls in smat debut match: SMAT தொடரில், ரயில்வே அணி வீரர் ஜம்ஷெட் ஆலம், தனது அறிமுகப் போட்டியிலேயே 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
4 பந்துகளில் 4 விக்கெட்
2026 ஆம் ஆண்டின் சையத் முஸ்தாக் அலி தொடரில், ரயில்வே மற்றும் சௌராஷ்டிர அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், ரயில்வே அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், ரயில்வே அணியின் பந்துவீச்சாளர் ஜம்ஷெட் ஆலம், தனது அறிமுக போட்டியிலேயே அடுத்தடுத்த 4 பந்துகளில், 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அடுத்த 9வது பந்திலே தனது 5வது விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதன் மூலம், கர்நாடகாவின் அபிமன்யு மிதுன் மற்றும் விதர்பாவின் தர்ஷன் நல்கண்டே ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜம்ஷெட் ஆலம் பெற்றுள்ளார்.
கிரிக்கெட்டுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜம்ஷெட் ஆலம்
உத்தரப்பிரதேசத்தில் ஃபாசில்நகர் என்ற சிறிய கிராமத்தை பூர்விகமாக கொண்ட ஜம்ஷெட் ஆலம்க்கு, அங்கு தியாகி மேஜர் அமியா திரிபாதியின் பெயரில் நடத்தப்படும் T20 போட்டித்தொடரை சிறு வயதில் பார்க்கும் போது அவருக்கு கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.
ஆனால் அவரின் கிரிக்கெட் ஆசைக்கு தந்தை பாஸ்கரிம் அலி எதிர்ப்பு தெரிவித்ததால், தனது 13 வயதிலே கையிலிருந்த ரூ.2,500 உடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

லக்னோவில் நண்பரின் வீட்டில் தங்கிய அவர், கொல்வின் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியைத் தொடங்கினார்.
பயிற்சிக் கட்டணத்தைக் கட்டுவதற்கும் சிரமம் ஏற்பட்டபோது அவரது அண்ணன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
மேலும், பயிற்சியாளர் பிஸ்வஜித் சின்ஹாவும், அவரின் சிறப்பான பந்துவீச்சை ஊக்குவிக்கும் வகையில், இலவசமாகப் பயிற்சி அளிப்பதாக உறுதியளித்தார்.
குடும்பத்தினர் சமாதானப்படுத்தியதால், வீடு திரும்பிய அவர் 2 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார்.
பின்னர் ரயில்வேஸ் அணிக்கு மாறிய அவருக்கு, விளையாட்டு ஒதுக்கீட்டில் ரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதகர் வேலை கிடைத்தது.
ரயில்வே வேலை கிடைத்த பின்னர், தந்தை அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னதாக T20 மும்பை லீக்கில் மணிக்கு 144 கிமீ வேகத்தில் பந்துவீசி பலரின் கவனத்தை ஈர்த்தார்.
2021 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காகவும், 2022 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காகவும் வலைப்பயிற்சி மேற்கொண்டார். மேலும், இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் பயிற்சி முகாமிலும் பங்கேற்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஜம்ஷெட் ஆலம் குறித்து விசாரித்து வருகின்றன.