பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீஸ் இல்லை - ரசிகர்களுக்கு அதிர்ச்சி தீர்ப்பளித்த நீதிமன்றம்
ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கு 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ்
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தை வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

மறுதணிக்கை செய்ய உள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி, ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக எடுக்கப்பட்ட முடிவு தவறானது. இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும். ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும்" என தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்த்வா, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
21 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
இதில் தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எங்களுக்கு உரிய வாய்ப்பு தரவில்லை. தனி நீதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளார். உரிய பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் தரவில்லை.

நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதை எதிர்த்து அவர்கள் வழக்குத் தொடரவில்லை. மனுவில் கோரப்படாத நிவாரணத்தை பட நிறுவனத்திற்கு தனி நீதிபதி அளித்துள்ளார்" என்ற வாதத்தை முன்வைத்தார்.
வாதத்தை கேட்ட நீதிபதிகள், "சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர் எப்படி வெளியீட்டு தேதியை நிர்ணயிக்க முடியும்?
பல்வேறு நடைமுறைகள் இருக்கும் போது சான்றுக்காக பொறுமையாக காத்திருக்காமல், அதை விடுத்து நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இதனால் வரும் ஜனவரி 21 ஆம் திகதி வரை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு ஜனநாயகம் பார்க்க முடியாதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |