இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவிற்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துக்கள்
இந்திய கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ராவிற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைத்தளங்களில் பகிரிந்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா
கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு துறையில் முதன்மை வீரராக ஜஸ்பிரித் பும்ரா திகழ்ந்து வருகிறார்.
இவரது பந்து வீச்சு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக முக்கிய பலமாக இருந்து வருகின்றது எனலாம்.
இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 128 விக்கெட்டுகளையும், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இவர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க போட்டியில் பும்ரா இடம்பெற்றிருந்தாலும், இரண்டாவது பாதியில் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டதால் பந்து வீச முடியவில்லை.
இந்நிலையில் இன்று குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவின் குழந்தை
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அவருடைய மனைவி சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், "எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நிறைவாக உள்ளன. இன்று காலை நாங்கள் எங்கள் குழந்தை அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவிற்கு மேல் இருப்பது போன்று உணர்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயம் கொண்டு வரும் எல்லாவற்றிற்கும் காத்திருக்க முடியாது'' என்று கூறி மகனின் புகைப்படத்தையும் சேர்த்து பதிவேற்றியுள்ளார்.
இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |