சட்டமன்றத்திற்கு பைக்கில் வந்ததால் கார் வாங்கி கொடுத்த ஜெயலலிதா.., சுவாரஸ்யங்களை பகிர்ந்த தொண்டர்
ஜெயலலிதாவுடன் நிகழ்ந்த சம்பவங்களை பற்றி தொண்டர் ஒருவர் பகிர்ந்த தகவல்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.
கார் பரிசு
கடந்த 2003 -ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சாத்தான்குளம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஆனால், இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சாதாரண விவசாயியாக இருந்த நீலமேக வர்ணம் என்பவரை தேர்வு செய்து ஜெயலலிதா அறிவித்தார்.
அவர், காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனை 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவச் செய்தார். கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்தவர் சட்டமன்ற உறுப்பினரான நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தற்போது நீலமேக வர்ணம், ஜெயலலிதா குறித்து பேசுகையில், "நான் ஒரு சாதார விவசாயி. 2003-ம் ஆண்டில் தொகுதியில் போட்டியிட சீட்டு கேட்ட பாப்போம் என்று ரூ.10000 பணம் கட்டினேன்.
ஜெயலலிதாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பணம் கட்டி விட்டேன், அவர் எனக்கு சீட்டு கொடுப்பார் என்று நினைக்கவே இல்லை.
பின்னர், எனக்கு ஆட்சியரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஜெயலலிதா உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார், நீங்கள் வாருங்கள் என்றார். என்னை அழைத்துச் செல்ல அனிதா ராதாகிருஷ்ணன் கார் அனுப்பி இருந்தார். ஆனால், நான் காரில் செல்லாமல் பேருந்தில் சென்றேன்.
பின்னர், போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தேன். அவர் என்னிடம் உங்களுக்கு கண் நன்றாக தெரியுமா என்று கேட்டார். அதற்கு நான், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். சுகர் கூட இல்லை என்றேன்.
உடனே அவர், சுகர் ஒரு பிரச்சனையா என்று சிரித்தார். உங்களுக்குத் தான் சீட்டு தரப் போகிறேன். இதனை அறிவிக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். பின்னர் எனக்கே சீட் கொடுத்தார்.
நான் MLA -ஆக இருந்தபோது சட்டமன்றத்திற்கு பைக்கில் சென்றேன். அப்போது காவல்துறையினர் என்னை வழிமறித்தனர். நான் சட்டமன்ற உறுப்பினர் அட்டையை காண்பித்த போது தான் ஏன் பைக்கில் வருகிறீர்கள்? காரில் வரவேண்டியதுதானே? என்றார்கள்.
நான் என்னிடம் கார் இல்லை என்றேன். மறுநாள் என்னை காளிமுத்து மூலம் அழைத்த ஜெயலலிதா, ஏன் பைக்கில் வந்தீர்கள்? என்றார். அப்போது, ஆமாம் உங்களிடம் கார் இல்லை என முன்பே சொன்னீர்கள்? என்று சொன்னார்.
பின்னர் செம்மலை வந்து, அம்மா உங்களுக்கு கார் வாங்கி கொடுக்கச் சொன்னார். என்ன வண்டி வேண்டும்?' என்றார். அதற்கு, நீங்களே ஏதாவது ஒரு காரை தேர்வு செய்யுங்கள் என்றேன். அவர் டொயோட்டா குவாலிஸ் வாங்கி கொடுத்தார்.
பின்னர் மீதி பணத்தை அம்மாவிடம் கொண்டு கொடுத்தேன். அவர், முழு பணமும் உங்களுக்கு தான் என்றார்.
மருத்துவமனை, வெளியூர் செல்வதாக இருந்தால் இந்த காரில் தான் போவேன். எனக்கு கார் ஓட்டத் தெரியாது. என் மகன் தான் ஓட்டுவார். அம்மாவின் நினைவாக இந்த காரை பத்திரமாக வைத்திருக்கிறேன்" என்று பகிர்ந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |