இந்தியாவுக்கான புதிய நட்புறவுத் தூதுராக இளம் கிரிக்கெட் வீராங்கனையை தேர்ந்தெடுத்த சுவிட்சர்லாந்து
Switzerland Tourism announced cricketer Jemimah Rodrigues as its Friendship Ambassador for India: சுவிஸ் சுற்றுலாத்துறை, கிரிக்கெட் வீராங்கனை ஜெமைமா ரோட்ரிகஸை இந்தியாவுக்கான தங்கள் நட்புறவுத் தூதுவராக அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கான சுவிஸ் சுற்றுலாத்துறையின் நட்புறவுத் தூதுவராக இளம் கிரிக்கெட் வீராங்கனையான ஜெமைமா ரோட்ரிகஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கான புதிய நட்புறவுத் தூதுவர்
பெங்களூருவில், நேற்று, அதாவது, அக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில், சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்ட்டின் நைடெக்கர் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பொதுவாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் மட்டுமே இந்தியர்கள் அதிக அளவில் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றனர்.
இந்த நிலையை மாற்றி, ஆண்டு முழுவதும் இந்தியர்களை சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வர ஈர்ப்பதே இந்த நியமனத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஜெமைமா ரோட்ரிகஸ் மூலமாக, அந்நாட்டின் கலாச்சார அனுபவங்கள், சாகச விளையாட்டுகள் மற்றும் அதிகம் அறியப்படாத அழகிய சுற்றுலாத் தலங்கள், இந்திய இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கப்படவுள்ளன.
இந்நிலையில், இந்தியர்கள் சுவிட்சர்லாந்துக்கு பயணிப்பதை எளிதாக்கும் வகையில், இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 28ஆம் திகதி முதல், சுவிஸ் சர்வதேச விமான நிறுவனமான SWISS, பெங்களூருவுக்கும் சூரிக்குக்கும் இடையில், வாரத்துக்கு ஐந்து நாட்கள் விமான சேவையை துவக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.