ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பள வேலையை விட்டவர் - இன்று பில்லியனர் தொழிலதிபர்
Jim Koch’s Billionaire Journey From Beer Startup: ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் கிடைக்கும் வேலையை விட்ட நபர் இன்று பில்லியனர் தொழிலதிபராக உயர்ந்து சாதித்துள்ளார்.
1.4 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு
அமெரிக்காவின் பிரபல பீர் நிறுவனமான Boston Beer Company-யின் நிறுவனர் ஜிம் கோச் (Jim Koch), ஆண்டுக்கு 2.5 லட்சம் அமெரிக்க டொலர் சம்பளம் வழங்கிய உயர்நிலை ஆலோசகர் வேலையை விட்டு வெளியேறி, இன்று 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.
இந்த சுவாரஸ்யமான தகவலை Forbes தனது சிறப்பு கட்டுரையில் வெளியிட்டுள்ளது.

வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு என்ற தந்தை
1984-ஆம் ஆண்டு, ஹார்வர்டில் சட்டம் மற்றும் நிர்வாகப் பட்டம் பெற்ற ஜிம் கோச், தனது சமையலறையிலேயே பீர் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கினார். அப்போது அமெரிக்க பீர் சந்தையை பெரிய நிறுவனங்கள் கட்டுப்படுத்தி வந்தன.
இதனால் பலர் அவரது முடிவை விமர்சித்தனர். அவரது தந்தையே “இது உன் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு” என்று கூறியதாக கோச் பின்னர் நினைவுகூர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் சிறந்த பீர்
ஆனால் சந்தையில் தரமான அமெரிக்க பீருக்கான தேவை இருப்பதை அவர் உணர்ந்தார். குடும்பத்தில் பல தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்ட ஒரு பழமையான பீர் தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு, Samuel Adams என்ற பெயரில் புதிய பீரை அறிமுகப்படுத்தினார். இதற்காக தனது சேமிப்புத் தொகையையும் பயன்படுத்தி, இரண்டாவது அடமானக் கடன் பெற்று, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 1,40,000 டொலர் நிதியையும் திரட்டினார்.

தொடக்கத்தில் விநியோகஸ்தர்கள் அவரது தயாரிப்பை ஏற்க மறுத்தனர். அதனால் அவர் நேரடியாக மதுபானக் கடைகள் மற்றும் பார்களுக்கு சென்று தனது தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. 1985-ஆம் ஆண்டு நடைபெற்ற Great American Beer Festival-இல் Samuel Adams, “அமெரிக்காவின் சிறந்த பீர்” என்ற விருதைப் பெற்றது.
இதன் பின்னர் நிறுவன வளர்ச்சி வேகமடைந்தது. 1995-ஆம் ஆண்டு Boston Beer Company பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் Samuel Adams மட்டுமின்றி Twisted Tea, Angry Orchard, Truly Hard Seltzer மற்றும் Sun Cruiser போன்ற பிரபல பிராண்டுகளையும் கொண்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை 2.1 பில்லியன் டொலரை எட்டியது.
"பணம் அதிகரிக்கும் போதும் எளிமை முக்கியம்"
77 வயதான ஜிம் கோச் இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். 2013 Ford Fusion காரையே பயன்படுத்தும் அவர், விமானப் பயணங்களிலும் சாதாரண வகுப்பிலேயே பயணிப்பதாக கூறியுள்ளார். “பணம் அதிகரிக்கும் போதும் வாழ்க்கையை எளிமையாக வைத்திருப்பது முக்கியம். அதிகம் இருப்பது எப்போதும் சிறந்தது அல்ல” என்பது அவரது வாழ்க்கை தத்துவமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |