ட்ரம்ப் தலையீட்டால் தடை செய்யப்பட்ட பிரபலமான நிகழ்ச்சி: தொகுப்பாளரின் சொத்து மதிப்பு
அமெரிக்காவில் தீவிர வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க் படுகொலை தொடர்பில் பிரபலமான தொகுப்பாளர் ஒருவர் பதிவு செய்த கருத்தால், அவர் முன்னெடுக்கும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை நாட்களிலேயே
அமெரிக்காவில் இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படும் Jimmy Kimmel Live என்ற நிகழ்ச்சியே, ஜனாதிபதி ட்ரம்பின் நெருக்கடியால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க் படுகொலை தொடர்பில் நேரலையில் பதிவு செய்த கருத்து கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது.
வானொலியில், அதுவும் ஞாயிறு இரவு மட்டும் நிகழ்ச்சியை நடத்தி தமது பாடசாலை நாட்களிலேயே ஊடகப் பணியைத் தொடங்கியவர் ஜிம்மி கிம்மல். அதன் பிறகு சியாட்டில் மற்றும் தம்பா பகுதிகளில் ஊதியம் பெறும் வேலைகளுக்கு செல்லத் தொடங்கினார்.
பின்னர் அவர் பாம் ஸ்பிரிங்ஸில் நிகழ்ச்சிகளை நடத்தினார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஐந்தாண்டு காலம் Jimmy the Sports Guy என்ற நிகழ்ச்சியை வழங்கினார். 1997ல் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் முதல் முறையாக நடித்து, 1999ல் எம்மி விருதையும் கைப்பற்றினார்.
2003 ஜனவரி மாதம் Jimmy Kimmel Live என்ற இரவு நேர நிகழ்ச்சியை தொடங்கினார். அதுவே அவரது முதன்மையான வருவாய் ஆதாரமாகவும் உள்ளது. 2025ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், ஜிம்மி கிம்மலின் மொத்த சொத்து மதிப்பு 50 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 15 மில்லியன்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் வரிசையில் அவருக்கு 24வது இடம் அளித்துள்ளது. அத்துடன் சராசரியாக ஆண்டுக்கு அவர் 16 மில்லியன் டொலர் சம்பாதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Jimmy Kimmel Live நிகழ்ச்சி ஊடாகவே அவர் ஆண்டுக்கு 15 மில்லியன் டொலர் சம்பாதிக்கிறார். ஒரு சீசனுக்கு சுமார் 170 எபிசோடுகள் மூலம், போனஸ் மற்றும் ராயல்டிகள் தவிர்த்து, அவர் ஒரு நிகழ்ச்சிக்கு தோராயமாக 88,235 டொலர் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்கார் விருதுகள் விழாவையும் தொகுத்து வழங்கியுள்ள கிம்மல், தமக்கு 15,000 டொலர் ஊதியம் வழங்கப்பட்டதாக அந்த மேடையிலேயே வெளிப்படுத்தியிருந்தார். அவர் நான்கு முறை அகாடமி விருதுகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |