இந்தியாவில் 257 நகரங்களுக்கு ஜியோ 5G சேவைகள்: பயனர்களை கவரும் வெல்கம் ஆஃபர்!
இந்தியா முழுவதும் 236 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 21 நகரங்களுக்கு இந்த சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
257 நகரங்கள்
இந்தியாவில் 5G சேவையை அறிமுகப்படுத்துவதில் ரிலையன்ஸ் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இதன் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் உள்ள 236 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் குஜராத், ஹிமாச்சல் பிரதேஷ், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 21 நகரங்களில் 5G சேவை விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் 257 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் Jio True 5G சேவைகளை பெறவுள்ளனர்.
ஜியோ நிறுவனம் அறிக்கை
இது தொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், Jio True 5G சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்களில் உள்ள பயனர்கள், அன்லிமிடெட் டேட்டாவை 1 GBPS+ வேகத்தில் பயன்படுத்துவதற்கான வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு கூடுதல் கட்டணம் ஏதுமின்றி சேவை இன்று முதல் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
மேலும் 2023ம் ஆண்டில் ஜியோ பயனர்கள் அனைவரும் 5ஜி சேவைகளை அனுபவிக்கும் வகையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5G சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜியோ 5ஜி திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.