பிரித்தானியா, கனடா, சிங்கப்பூரில் சேவையை விரிவுபடுத்தும் ஜியோஹாட்ஸ்டார்
jiohotstar launches in uk, canada, singapore: பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு ஜியோஹாட்ஸ்டார் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
ஜியோஹாட்ஸ்டார் 3 நாடுகளுக்கு விரிவாக்கம்
ரிலையன்ஸின் ஊடக வணிகம் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய வணிகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனமான ஜியோஸ்டாரால் ஜியோஹாட்ஸ்டார் ஒளிபரப்பு தளம் இயக்கப்படுகிறது.

ஜியோ ஹாட்ஸ்டார், இந்தியாவில், மாதம்தோறும் சராசரியாக 500 மில்லியன் பயனர்களையும், 3 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சி தொகுப்பையும் கொண்டுள்ளது.
இதில் திரைப்படங்கள் முதல் நேரலை விளையாட்டு போட்டிகள் வரை ஜியோஸ்டார் நெட்வொர்க்கின் 100க்கும் மேற்பட்ட சேனல்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என 19 மொழிகளில் உள்ளடக்கங்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில், ஜியோஹாட்ஸ்டார் அதன் சேவையை பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கும் விரிவுபடுத்துகிறது.
ஜியோஸ்டாரின் சர்வதேச வர்த்தகப் பிரிவுத் தலைவர் அமித் மல்ஹோத்ரா கூறுகையில், "ஸ்ட்ரீமிங் கடந்த பத்தாண்டுகளாகத் தனது உள்ளடக்கங்களின் எண்ணிக்கையில் போட்டியிட்டு வருகிறது.

பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதத்தை மறுபரிசீலனை செய்வதே இப்போதுள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.
தெற்காசியப் பார்வையாளர்கள், மொழி, தலைமுறை மற்றும் குடும்பங்களைக் கடந்து இந்தியப் பொழுதுபோக்குடன் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் தங்களின் சொந்தக் கதைகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி, புதிய கதைகளையும் கலாச்சாரங்களையும் அதிகளவில் தேடுகின்றனர்.
ஒரு இந்திய ஸ்ட்ரீமிங் சேவையை புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு நின்றுவிடாமல், பரந்து விரிந்த, போதிய சேவை கிடைக்காத இந்த உலகளாவிய பார்வையாளர்களுக்காகக் கட்டமைப்பதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் காண்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |