அவுஸ்திரேலியாவில் இந்தியர்கள் வேலை பெறுவது எப்படி? முழு விவரங்கள் இதோ
அவுஸ்திரேலியா, இந்தியர்களுக்குபல்வேறு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.
2021 ஆம் ஆண்டு தரவின் படி அவுஸ்திரேலியாவில், 7.83 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கிறார்கள். இதில் 1.25 லட்சம் பேர் கல்விக்காக வந்துள்ள மாணவர்கள் ஆவார்கள். அவுஸ்திரேலியாவில் அதிகளவில் உள்ள வெளிநாட்டவர்கள் பிரித்தானியர்களுக்கு அடுத்ததாக, இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
செவிலியர்
அவுஸ்திரேலியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கேற்ற வகையில் செவிலியர்களின் தேவையும் அதிகளவில் உள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிற்கு சுமார் 80 ஆயிரம் செவிலியர்கள் தேவைபடுகின்றனர்.
மென்பொருள் துறை
பல்வேறு தொழில்களின் டிஜிட்டல் மாற்றம் காரணமாக அவுஸ்திரேலியாவில் ICT துறை வேகமாக விரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக, மென்பொருள் உருவாக்குநர்கள், நெட்வொர்க் பொறியாளர்கள், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் வணிக ஆய்வாளர்கள் போன்ற வேலைகளுக்கான நிபுணர்கள் தேவை அதிகரித்துள்ளது.
கட்டுமான துறை
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றான கட்டுமானத் துறை. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் கட்டுமான தொழிலில், கட்டுமான மேலாளர்கள், கட்டிட பொறியாளர்கள், தச்சர், எலெக்ட்ரிசின் என 5 லட்சம் பேர் தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா
சில வருடங்களாக அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்பவர்களின்/பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம், அவுஸ்திரேலிய சுற்றுலாத் துறை ஹோட்டல்கள், உணவகங்கள், பயண முகமைகள் மற்றும் நிகழ்வு மேலாண்மை ஆகியவற்றில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
சுரங்கம் மற்றும் வளங்கள்
அவுஸ்திரேலியா கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. இதன் விளைவாக சுரங்கப் பொறியாளர்கள், புவியியலாளர்கள், இயந்திர ஆபரேட்டர்கள் மற்றும் உலோகவியலாளர்கள் போன்ற வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.
மேலும் ஆசிரியர்கள், கல்வி ஆலோசகர்கள், உளவியலாளர்கள், நிதி ஆய்வாளர்கள், கணக்காளர்கள், தணிக்கையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு, அவுஸ்திரேலியாவில் ஆட்களின் தேவை உள்ளது.
விசா
இந்தியர்கள் அவுஸ்திரேலியாவில் 2 ஆண்டுகள் தங்கி வேலை செய்யும் வகையில் MATES (Mobility Arrangement for Talented Early-professionals Scheme) என்ற விசா திட்டம், 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் 18 முதல் 30 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கம், பொறியியல், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் , செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட துறையில் பட்டம் பெற்றவர்கள், பட்டம் பெற்ற துறையில் தான் வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
முதற்கட்டமாக 3000 விசாக்கள் வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற, 25 ஆஸ்திரேலிய டொலர் செலுத்த வேண்டும். அதன் பின்னர் வாக்குசீட்டு முறையில் 3000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தற்காலிக திறன் பற்றாக்குறை விசா(TSS)
இந்தியர்களுக்கான இந்த வகையான ஆஸ்திரேலிய வேலை விசா தனிநபர்கள் ஆஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் வரை பணியாற்ற அனுமதிக்கிறது.
இதற்கு விண்ணப்பிக்க, உங்கள் விசாவை ஆதரிக்கத் தயாராக இருக்கும் ஒரு முதலாளி இருப்பது அவசியம். விண்ணப்பதாரர்கள் பொருத்தமான தகுதிகள் மற்றும் பணி அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
திறமையான சுயாதீன விசா
இந்த விசா அவுஸ்திரேலியாவில் தேவைப்படும் திறன்களைக் கொண்ட நபர்களுக்கானது. இந்த விசா மூலம், ஒரு நபர் அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி வாழ்ந்து வேலை செய்யலாம். இருப்பினும், விண்ணப்ப செயல்முறை போட்டித்தன்மை வாய்ந்தது மற்றும் உயர் மட்ட திறன்கள் மற்றும் தகுதிகள் தேவை.
திறமையான பரிந்துரைக்கப்பட்ட விசா
இந்த விசா அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு மாநில அல்லது பிரதேச அரசாங்கத்திடமிருந்து ஸ்பான்சர்ஷிப் பெற்ற தனிநபர்களுக்கானது. இந்த விசா மூலம், ஒரு தனிநபர் அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி வாழ்ந்து வேலை செய்யலாம்.
முதலாளி நியமனத் திட்டம் விசா (ENS)
இந்த விசா அவுஸ்திரேலிய முதலாளியால் பரிந்துரைக்கப்பட்ட திறமையான தொழிலாளர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.
முழு வேலை உரிமைகள், சலுகைகள், சுகாதார சேவைகளுக்கான அணுகல் மற்றும் அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை பெறலாம்.
வேலைவாய்ப்பு தளங்கள்
அவுஸ்திரேலியாவில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து, www.workforceaustralia.gov.au, www.jobsandskills.gov.au, www.seek.com.au, Linkedin, போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பை பெற, ஆங்கில மொழிப்புலமை மற்றும் வேலைக்கான திறன் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |