பிரான்சில் வேலை வாய்ப்பு... பிரதான துறைகள், சம்பளம் உட்பட விரிவான தகவல்
பிரான்சில் பொறியியல், மென்பொருள், சுகாதாரம், நிதி, மனித வளம் உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன.
சட்டப்பூர்வ அங்கீகரம்
பிரான்ஸ் அதன் பெரிய பொருளாதாரம் காரணமாக, வெளிநாட்டில் வேலை தேடும் நபர்களுக்கு ஒரு முதன்மையான இடமாக உள்ளது. ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை, காப்பீடு, சமூகப் பாதுகாப்பு, வேலைக்கான நெகிழ்வான நேரங்கள் மற்றும் உயர் சராசரி சம்பளம் போன்ற பல ஊழியர் நட்பு நன்மைகளை பிரான்ஸ் வழங்குகிறது.
பிரான்சில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் விருந்தோம்பல், நிதி, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறையில் பல வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் பிரான்ஸில் வேலை பார்க்க சட்டப்பூர்வ அங்கீகரத்தைப் பெறுவது அவசியம்.
ஒரு நபர் பிரான்ஸுக்கு வணிகம் செய்ய அல்லது 90 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு குறுகிய கால விசா தேவைப்படும். இந்த விசா புதுப்பிக்க தகுதியற்றது. நிரந்தரமாக பிரான்சில் பணிபுரிய விரும்பும் பணியாளர்களுக்கு நீண்ட கால விசா தேவை. இந்த வகையான விசா பொதுவாக ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் புதுப்பிக்கப்படலாம்.
பணியாளருக்கு பிரான்சில் வாழ முறையான குடியுரிமை அனுமதி தேவை. ஒரு வருடத்திற்கும் குறைவாக பணியமர்த்தப்பட்டால், அவர்களுக்கு பணி விசா தேவை, அதனுடன் தற்காலிக குடியிருப்பு அனுமதியும் பெறுவார்கள். பிரெஞ்சு டேலண்ட் கடவுச்சீட்டு என்பது ஒரு சிறப்பு வகை பணி விசா ஆகும், இது சில தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு வழங்கப்படுகிறது.
ஃபிரெஞ்ச் டேலண்ட் கடவுச்சீட்டைப் பெறும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் செல்லலாம். இந்த விசாவின் செல்லுபடியாகும் காலம் நான்கு ஆண்டுகள். 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பயிற்சியாளர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வேலை விடுமுறை எடுக்கும் நிபுணர்களுக்கு பிரான்ஸ் தனி வேலை விசாவை வழங்குகிறது.
EU/EEA குடிமகன் அல்லாதவராக இருந்தால், பிரான்சில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய உங்களுக்கு வேலை விசா தேவைப்படும். உங்களுக்குத் தேவையான விசா வகை உங்கள் வேலை மற்றும் உங்கள் முதலாளியைப் பொறுத்தது.
அதிக தேவை
பிரான்சில் பணியாற்ற விரும்பும் மருத்துவர்கள் அல்லது மருத்துவ மாணவர்கள் அங்கு சென்று சிக்கலின்றி பயிற்சி செய்யலாம். இது நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் வேலை. வருடத்திற்கு சராசரி சம்பளம் 151,046 யூரோ அல்லது மணிக்கு 73 யூரோ என்றே கூறப்படுகிறது.
பிரான்சில் சட்டத்தரணிகளுக்கும் சட்ட நிபுணர்களுக்கும் வாய்ப்புகள் மிகுந்து காணப்படுகிறது. சட்ட நிபுணர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு சுமார் 138,700 யூரோ சம்பளமாக வழங்கப்படுகிறது. சட்டத்தரணி ஒருவரின் சராசரி சம்பளம் ஆண்டுக்கு 92,300 யூரோ அல்லது மாதம் 7,691 யூரோ.
வர்த்தக விமானிகள் பிரான்சில் அதிக ஊதியம் பெறும் தொழில் பிரிவாக உள்ளனர். இருப்பினும், விமான நிறுவனங்களில் வேலை கிடைப்பது மிகவும் எளிதானது அல்ல. சரியான சான்றிதழ் மற்றும் நடைமுறை அறிவும் வேண்டும். எல்லா வரம்புகளையும் நீங்கள் கடந்துவிட்டால், உங்கள் தொடக்க ஊதியம் ஆண்டுக்கு சுமார் 55,000 முதல் 200,000 யூரோ வரை இருக்கும்.
அத்துடன் மென்பொருள், சைபர் பாதுகாப்பு, செவிலியர், காப்பகங்களில் வேலை, பொறியாளர்கள், கட்டுமானத்துறை, வாகன சாரதிகள், சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளிலும் வேலை வாய்ப்பைப் பெறலாம்.
மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டும் செவிலியர்கள் உட்பட 25,000 ஊழியர்கள் தேவை என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். மட்டுமின்றி, திறமை பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், அடுத்த 5 ஆண்டுகளில், மென்பொருள் பொறியாளர் பதவிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பிரான்சில் 20,000 சாரதிகள் பற்றாக்குறை உள்ளது, இது சாலை சரக்கு போக்குவரத்து தொழிலை எவ்வளவு மோசமாக பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
பிரான்சில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது, மேலும் புதிய பள்ளி பருவம் தொடங்கும்போது 3,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஏப்ரல் 2025ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் 42,825 வேலை வாய்ப்புகள் பதிவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |