ஓவரா பேசிய மைக்கல் வாகனுக்கு செம பதிலடி கொடுத்த ஜோ ரூட்! ஜெயித்து காட்டுவாரா?
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகனின் கருத்திற்கு, ஜோ ரூட் மறைமுகமாக செம பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன ஜோ ரூட்டை, அந்தணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் விமர்சித்திருந்தார்.
அதில், ஜோ ரூட் சிறந்த கேப்டன் என்று அனைவரும் கொண்டாடுகிறார்கள். அப்படி அவர் சிறந்த கேப்டன் என்றால், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு ஜோ ரூட், இங்கிலாந்து கேப்டனாக இருந்தால், ஆஷஸ் கிரிக்கெட்டில் செயல்படுவதை வைத்து தான் கணக்கிடப்படுகிறார்கள். ஆனால் எனக்கு தற்போதைக்கு இந்திய அணியுடனான தொடரை வெல்வது தான் முக்கியம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான தொடர். அதன் பிறகு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கவனிப்போம்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை வெல்ல வேண்டும் என்பது தான் அனைத்து வீரர்களின் ஆசை. கேப்டன் அல்லது பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
இங்கிலாந்து அணி கேப்டனாக என்னை பற்றி மற்றவர்கள் சிந்திப்பது சம்பந்தமே இல்லாதது. அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வது தான் எனது பணி.
எனது கேப்டன்சி சிலருக்கு பிடிக்கவில்லை என்றால் எனக்கு கவலையில்லை. பலரும், பல விதமான கருத்துக்களை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். என்னைப்பொறுத்தவரை, நான் பெருமைபடுகிறேன் என்று கூறியுள்ளார்.