இவங்க 2 பேர அசால்ட்டா நினைச்சுட்டேன்! தப்பு பண்ணிட்டேன்: தோல்வி குறித்து ஜோ ரூட் வேதனை
இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு, ஒரு கேப்டனாக நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன, ஜோ ரூட் கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் வேதனையுடன் போட்டிக்கு பின்பு பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒரு கேப்டனாக இந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் சிறப்பாகவும், வித்தியாசமாக சிந்திக்க தவறிவிட்டேன்.
குறிப்பாக ஷமி மற்றும் பும்ராவின் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தையே மாற்றிவிட்டதாக நான் கருதுகிறேன். அவர்களை வீழ்த்தும் விஷயத்தில் நான் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அவர்களின் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தின் இக்கட்டான நிலைக்கு எங்களை கொண்டு சென்றுவிட்டது. சிறப்பான பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இருக்கும் போதும், எங்களால் இந்திய அணியை ஆல் அவுட்டாக்க முடியாதது வேதனையை கொடுத்தது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் டெய்லண்டர் பேட்ஸ்மேன்களை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டேன்.
அவர்கள் எத்தகைய பந்தையும் எதிர்கொண்டு விளையாடும் திறன் கொண்டவர்கள் என தெரிந்தது. எங்களது பந்துவீச்சில் இன்னும் வீரியமும் விவேகமும் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.