தமிழன் வாஷிங்டன் சுந்தர்-ரிஷப் பாண்ட் ஆட்டத்தை புகழ்ந்த ஜோ ரூட்! தோல்வி குறித்து விளக்கம்
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், அந்தணியின் கேப்டன் ஜோ ரூட், இந்திய அணி எங்களை விட அனைத்து விதத்திலும் சிறப்பாக விளையாடியதாக கூறினார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று முடிந்தது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற் நான்காவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், இந்த தொடரின் முதல் போட்டி எங்களுக்கு பாசிட்டிவாக அமைந்தது.
ஆனால், அதன் பின் நடந்த மூன்று போட்டியிலும் எங்களால் இந்திய அணிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
இந்த தொடரில் நிறைய விடயங்களை கற்று கொண்டோம்.ஒரு சிறந்த அனுபவமாக இந்த தொடர் எங்களுக்கு அமைந்தது.
இதை வைத்து நாங்கள் அடுத்த தொடருக்கு முன்னேறுவோம் என்று நினைக்கிறேன். இந்திய அணி சில முக்கிய இடங்களில் சிறப்பாக விளையாடியது.
குறிப்பாக வாஷிங்டன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தேவையான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களைப் போன்று நாங்கள் ரன் குவிக்க தவறிவிட்டோம்.
இந்திய அணி மொத்தத்தில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் என்று கூறினார்.
