இதோட நாங்க விடமாட்டோம்! வெற்றிக்கு பின் இந்தியாவை எச்சரித்த ஜோ ரூட்
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பின், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேசியுள்ளார்.
லீட்ஸில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இரண்டாவது டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து பழி தீர்த்துள்ளது.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற வெற்றியுடன் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இப்போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன ஜோ ரூட் கூறுகையில், இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமே பந்து வீச்சாளர்களைத் தான் நான் கூறுவேன்.
இது போன்று எங்களால் விளையாட முடியும் என்பது எங்களுக்கு தெரியும், அதை செய்து காட்டியுள்ளோம். வெற்றியையும் பெற்றுள்ளோம். அதற்கான திறமையான வீரர்களும் எங்களிடம் உள்ளனர். இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டனர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பான அடித்தளமிட்டு கொடுத்தனர். அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன், மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் முன் மாதிரியாக இருந்து வருகிறார்.
அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிய டேவிட் மலானுக்கும் என்னுடைய பாராட்டுக்கள், ஒரு அணியின் கேப்டனாக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இதோடு இந்த தொடர் முடியவில்லை, அடுத்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்த போட்டியிலும் இதே போன்று விளையாடி வெற்றிக்கு முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.