தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார்: அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும் என அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 14வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 118 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் 15,291 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தற்போது 31 வயதே ஆகும் ஜோ ரூட், 9 ஆண்டுகளிலேயே 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலும் பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், சச்சின் தெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்புள்ளது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
அவர் ஜோ ரூட் குறித்து கூறுகையில், 'ஜோ ரூட் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் விளையாட வாய்ப்புள்ளது. எனவே அவர் தெண்டுல்கரின் சாதனையை அடைந்து விடுவார் என்று நினைக்கிறேன்.
நான் கடந்த 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை அவர் துடுப்பாட்டம் செய்வதை பார்த்து வருகிறேன். ரூட் தனது தொழில் வாழ்க்கையின் முதன்மையான நிலையில் இருக்கிறார்.
எனவே அவர் நல்ல உடல்தகுதியுடன் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில், 15,000 ஓட்டங்களை விரைவில் எட்டிவிடுவார். அதன்மூலம் சச்சின் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடித்து விடுவார்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Reuters
ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் சாதனையை முறியடித்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவரது சாதனையை நெருங்குவது மிகவும் கடினம்.
ஏனெனில், தெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதுவரை 152 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜோ ரூட் 6,109 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Getty Images