ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்? அதிர்ச்சியில் ஐபிஎல் அணிகள்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள 15-வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ளது.
இதற்கான திகதி இன்னும் அதிகாரப்பூர்வர்மாக அறிவிக்கப்படவில்லை.
இந்த முறை அனைத்து அணிகளும் மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அனைத்து வீரர்களையும் வெளியில் விட்டுள்ளதால், இந்த ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக வந்துள்ள லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளும், இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான ஜோப்ரா ஆர்ச்சர் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவரை எடுக்க எதிர்பார்ப்பில் இருந்த ஐபிஎல் அணிகளுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ஏனெனில், அவருடைய முழங்கை காயம் சரியாக ஜுன் 22-ஆம் திகதி வரை ஆகும் என்பதால், அவரால் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலம் மற்றும் போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாதாம்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், கடந்த 11-ஆம் திகதி லண்டனில் காயமடைந்த ஆர்ச்சருக்கு வலது முழங்கையில் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதி படுத்தியுள்ளது.
இதனால் அவர் மீண்டும் கிரிக்கெட் எப்போது திரும்புவார் என்பது இன்னும் தீர்மானிக்கபடவில்லை. இதன் காரணமாக, ஆர்ச்சர் வரும் குளிர்காலத்தில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார்.
அதன் பின், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியே இருந்த, அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் இருந்து விலகிய இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.