இருண்ட இடத்தில் சென்றதால்.. இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாது என பயந்தேன்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் தன்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என நினைத்து பயந்ததாக தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த சில மாதங்களாக விளையாடாமல் இருக்கிறார். டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் என இரண்டு பெரிய தொடர்களை அவர் தவறவிட்டார். முழங்காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அவர் கூறுகையில், 'கடந்த மே மாதம் எனது முதல் அறுவை சிகிச்சைக்கு பிறகு எனது வலது முழங்காலில் வித்தியாசமாக எதையும் நான் உணரவில்லை. நான் பந்துவீசத் தொடங்கும் வரை அது வெற்றிகரமாக இருந்ததா என்பதை நான் முழுமையாக அறியப் போவதில்லை, ஆனால் டிசம்பரில் எனது இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு பிறகு நிறைய விடயங்கள் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்.
ஏறக்குறைய 5 மாதங்கள் கழித்து இப்போது நிம்மதியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் சில விடயங்கள் சரியாக நடக்காதபோது, கிரிக்கெட் வாழ்க்கையை இழக்க போகிறோம் என்று நினைத்து பயந்தேன். ஆனால் இப்போது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
அதன் ஒரு பகுதி தான் அவர்கள் என்னை அணிக்கு திரும்ப அவசரப்படுத்தாதது. முதல் அறுவை சிகிச்சைக்கு பிறகு இருண்ட இடத்திற்கு சென்றதால், இதுபோன்ற சூழ்நிலைகளில் மக்கள் ஏன் மனநலத்தின் அடிப்படையில் கீழ் நோக்கி செல்கிறார்கள் என்பதை என்னால் பார்க்க முடிந்தது. அத்தகைய சூழலில் எவரும் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவது இயல்பானது. ஆனால் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரத்திற்காக ஒப்பந்தத்தை துரத்த வேண்டிய அவசியமில்லை' என தெரிவித்துள்ளார்.
ஜோப்ரா ஆர்ச்சர் 17 ஒருநாள் போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், 13 டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.