பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு
John Healey announce £100 Winter Relief Energy Grant: பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களை குறைக்கும் வகையில் சிறப்பு நிவாரணத் திட்டத்தை சான்சலர் ஜான் ஹீலி(Chancellor John Healey) அறிவித்துள்ளார்.
£100 ஆற்றல் மானியம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் நடவடிக்கைகள் காரணமாக உலக அளவில் எரிபொருள் மற்றும் பயன்பாட்டு பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளன.
அதிகரிக்கும் இந்த வாழ்க்கை செலவினங்களை கருத்தில் கொண்டு குளிர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பிரித்தானியாவின் சான்சலர் ஜான் ஹீலி, £100 ஆற்றல் மானியம் வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் திடீர் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

வசந்த காலம் தொடங்குவதற்குள் மக்களுக்கு நேரடியாக உதவி கிடைக்கும் வகையில் £2.6 பில்லியன் செலவில், கவுன்சில் வரி பிரிவு A முதல் D வரை உள்ள சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம் நேரடியாக பயனர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சான்சலர் ஜான் ஹீலி, மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் காரணமாக ஆற்றல் கட்டணங்கள் உயர்வு பொதுமக்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சூழல்களில் பொதுமக்கள் தங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதை விட சிறிய நிம்மதியான இடைவெளியை மட்டுமே அரசிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

வரிச் சலுகை நீட்டிப்பு
£100 ஆற்றல் மானிய திட்டத்துடன் சேர்த்து மதிப்புக் கூட்டு வரி (VAT) குறைப்பின் காலத்தையும் நீடித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட தற்காலிக மதிப்புக் கூட்டு வரி (VAT) குறைப்பு ஜுலை மாதம் வரை நீடிக்கப்படுவதாகவும், இதன் மூலம் நுகர்வோர்கள் சுமார் £50 சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேஸ் பில்களுக்கான நிலை கட்டணங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
மேலும் எதிர்காலத்தில் நாட்டின் மின் உற்பத்தி செலவை குறைக்கும் வகையில் பிரித்தானியாவில் ஆற்றல் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.