ஜெம் வீரமணி வழக்கில் கட்சி தலைவருக்கு தொடர்பா? வெளியான விளக்கம்
john pandian reject link on gem veeramani case: ஜெம் வீரமணி வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என ஜான் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கு
பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணி, சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதில், வீரமணிக்கு உறுதுணையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்த ஆதாரங்களை 2024 ஆம் ஆண்டிலே காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி நிர்வாகியான ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் குமார் புகார்
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி, எழும்பூரில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மூத்த காவல் அதிகாரி அதிகாரி உதவி ஆணையர் கண்ணன் சந்தித்து வீரமணி, சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன்.
அத்துடன் வீரமணி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்கான ஸ்கிரீன்ஷாட்களையும் இணைந்திருந்தேன். வீரமணி மற்றும் சாந்தி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டே புகார் அளித்தேன்.
சென்னை தேனாம்பேட்டையில் சாந்தியின் வீட்டில் அவர் வீரமணியின் வீடியோவை காண்பித்தார். அதை நான் என் செல்போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், சாந்தி வீடியோ ஆதாரங்களை வைத்து வீரமணியை மிரட்டி பணம் பறித்துள்ளார். இந்த பணத்தகராறில், வீரமணிக்கு ஆதரவாக தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் என்னை மிரட்டுவதாகவும், நீங்கள் அவருடன் பேச வேண்டும் எனவும் சாந்தி என்னிடம் கூறினார் என தெரிவித்துள்ளார்.
ஜான் பாண்டியன் விளக்கம்
இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்த ஜான் பாண்டியன், "இந்த விவகாரத்தில் கூறப்படும் சாந்தி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு மாநிலத் தலைவராக இருக்கும் ரஞ்சன்குமார் மட்டுமே எனக்கு அறிமுகமானவர். ஜெம் வீரமணியை மிரட்டி, அவரிடமிருந்து பெரிய தொகையைப் பணம் பறித்துக் கொடுக்குமாறு ரஞ்சன்குமார் தான் என்னை அணுகிப் பேசினார்.
இதற்காகவே சாந்தி திட்டமிட்டு வீடியோக்களை எடுத்து, அதனை ஒரு மிரட்டல் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார். தொழிலதிபர் வீரமணியை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமே அவர்களின் திட்டமாக இருந்தது.
இப்படியொரு தவறான காரியத்தில் தலையிட என் மனம் சம்மதிக்கவில்லை. இதனால் ரஞ்சன்குமாரின் கோரிக்கையை முற்றிலுமாக மறுத்துவிட்டு, நான் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.