அம்பர் ஹெர்டுக்கு எதிரான வெற்றி., இந்திய உணவகத்தில் நண்பர்களுக்கு விருந்து கொடுத்த ஜானி டெப்!
நடிகர் ஜானி டெப், முன்னாள் மனைவி அம்பர் ஹெர்டுக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றிபெற்றத்தை அடுத்து, ஒரு இந்திய உணவகத்தில் தனது நண்பர்களுக்கு சிறப்பு விருந்து கொடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள வாரணாசி (Varanasi) எனும் பிரபலமான உணவகத்தில் இந்த கொண்டாட்ட விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு கொண்டாட்டமான கறி விருந்துக்கு 62,000 அமெரிக்க டொலரை (இந்திய பண மதிப்பில் ரூ. 48.1 லட்சம்) செலவிட்டதாக நியூயார்க் போஸ்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அம்பர் ஹெர்டுக்கு எதிரான அவதூறு வழக்கில் கடந்த புதன்கிழமை வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸ் நீதிமன்றத்தில் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஜானி டெப் வெற்றிபெற்றார். இந்த வழக்கில் அவருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடாக ஹெர்டு வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, வழக்கு வெற்றியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 58 வயதான டெப், பர்மிங்காமின் மிகப்பெரிய இந்திய உணவகமான வாரணாசியில், உண்மையான இந்திய உணவுகளுடன் ரோஸ் ஷாம்பெயின் மற்றும் காக்டெய்ல் மதுபான விருந்தில் ஈடுபட்டார்.
ஒரே நேரத்தில் 400 பேர் அமரக்கூடிய அந்த ஆணவகத்தை, ஜானி டெப்பின் பாதுகாப்புக் குழு சரிபார்த்த பிறகு, அங்கு இருந்த ஊழியர்களிடம் கட்டிப்பிடித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஞாயிற்றுக்கிழமை மதியம் ஜானி டெப் ஒரு குழுவினருடன் சாப்பிட வர விரும்புவதாக எங்களுக்கு அழைப்பு வந்தது" என்று வாரணாசியின் செயல்பாட்டு இயக்குனர் முகமது ஹுசைன் தெரிவித்தார்.
"நான் அதிர்ச்சியடைந்தேன், முதலில், இது ஒரு நகைச்சுவையாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் பின்னர் அவரது பாதுகாப்புக் குழு வந்து உணவகத்தை சோதனை செய்தது, மற்ற உணவகங்களால் அவர் தொந்தரவு செய்யப்படலாம் என்று நாங்கள் கவலைப்பட்டதால் முழு இடத்தையும் அவர்களுக்கு அனுமதித்தோம்" என்று ஹுசைன் மேலும் கூறினார்.
டெப் அங்கு சுமார் மூன்று மணி நேரம் தங்கி, மேலாளரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்தார், பின்னர் ஒரு டேக்அவே பையுடன் புறப்பட்டார் என்று கூறப்படுகிறது.