பிரித்தானியாவில் இது தொடரும்! போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
பிரித்தானியாவில் பிளான் பி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தொடரும், எதிர்வரும் வாரங்களில் NHS கணிசமான அழுத்தத்தை எதிர்கொள்ளும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Aylesbury-ல் உள்ள தடுப்பூசி மையத்திற்கு விஜயம் செய்த போரிஸ் ஜான்சன் கூறியதாவது, நாடு கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்ததை விட தற்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது, இதற்கு முக்கிய காரணம் அறிவியல் மற்றும் தடுப்பூசி தான்.
எதிர்வரும் வாரங்களில் NHS கணிசமான அழுத்தத்தை எதிர்கொள்ளும். பிரித்தானியாவில் கொரோனா தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று நினைப்பது முற்றிலும் முட்டாள்தனமானது.
நாம் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து பிளான் பி கட்டுப்பாடுகளை அமுலில் வைத்திருக்க வேண்டும் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனாவை எதிர்கொள்ள தற்போது அமுல் இருக்கும் கட்டுப்பாடுகள் சரியான ஒன்றாக இருக்கிறது. நாம் தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், இதே பாதையில் நாம் தொடர வேண்டும்.
தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் பரிசீலனை செய்யும். பூஸ்டர் தடுப்பூசி திட்டம் மற்றும் பிளாம் பி பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் இன்னும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பலர், பூஸ்டர் டோஸ் போடவில்லை. மூன்றாவது டோஸ் உண்மையில் ஒரு பெரிய, பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என போரிஸ் ஜான்சன் கூறினார்.