இளம்பெண்ணை வன்கொடுமை செய்ததாக பிரபலம் மீது குற்றச்சாட்டு! அதிர்வலையை கிளப்பிய வழக்கில் 8 ஆண்டுகள் பின் நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியாவில் இளம்பெண் தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெஹல்கா பத்திரிகையில் முன்னாள் முதன்மை செய்தி ஆசிரியராக இருந்தவர் தருண் தேஜ்பால்.
இவர் கடந்த 2013ம் ஆண்டு தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவருக்கு கோவாவில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் லிஃப்டில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்பது தருண் தேஜ்பால் மீதான வழக்காகும்.
இந்த வழக்கு அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து அவர் மீது கோவா பொலிசார் பலாத்காரம் செய்தல், அதிகாரத்தை பயன்படுத்தி பலாத்காரம் செய்ய முனைதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர் மே 2014ல் ஜாமினில் வெளியே வந்த தேஜ்பால், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் முறையீடு செய்திருந்தார்.
ஆனால் அந்த மனுக்களை இரு நீதிமன்றங்களும் தள்ளுபடி செய்தன. கோவா மாவட்ட நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி தேஜ்பால் நிரபராதி என கூறி கோவா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தேஜ்பால், நீதியின் பக்கம் நீதிமன்றம் நின்றதாக குறிப்பிட்டுள்ளார்.