அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் அமெரிக்கர்களே - ட்ரம்பின் பிறப்புரிமை உத்தரவை தடை செய்த நீதிமன்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பிறப்புரிமையை நீக்கும் உத்தரவை பிறப்பித்ததற்கு எதிராக அமெரிக்க மாவட்ட நீதிபதி ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள், அவர்கள் பெற்றோர் குடியுரிமையற்றவர்களாக இருந்தாலும், அமெரிக்கக் குடிமக்களே என பாஸ்டனில் அமெரிக்க மாவட்ட நீதிபதி லியோ சோரோக்கின் (Leo Sorokin) தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், ட்ரம்பின் பிறப்புரிமை நீக்கும் உத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் சட்டபூர்வமாக நியாயமற்றது என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புரிமை வழங்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் அரசின் முயற்சி மூன்றாவது முறை நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ளது.
இது பதினொரு மாநிலங்கள் மீது நேரடி பொருளாதார பாதிப்பு ஏற்படுத்தும் என நீதிமன்றத்தில் ஆதாரம் முன்வைக்கப்பட்டது.
நியூ ஜெர்சி மாநிலத்தின் தலைமை சட்டத்தரணி மேத்யூ பிளாட்கின் வழக்கை முன்வைத்தார். அவர் “அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் அமெரிக்கர்கள் தான். இது எப்போதும் இருந்ததுபோலவே இன்றும் தொடரும்.” என தெரிவித்துள்ளார்.
நீதிபதி சொரோக்கின் தனது தீர்ப்பில், 14வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பிறப்புரிமையை அமெரிக்க அதிபர் ஒருவரால் மாற்ற முடியாது எனவும், இது அரசியலமைப்பிற்கு எதிரான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், நியூ ஹாம்ஷையர் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ நீதிமன்றங்களும் இந்த உத்தரவை தடை செய்துள்ளன. மேலும், மேரிலாந்தில் இன்னொரு தீர்ப்பு விரைவில் வரலாம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |