பிரித்தானிய இளவரசருக்கு கடும் பின்னடைவு: காலக்கெடு விதித்த அமெரிக்க நீதிபதி
அமெரிக்காவில் பெண் ஒருவர் தொடர்ந்த சிவில் வழக்கில், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி காலக்கெடு விதித்துள்ளார்.
குறித்த வழக்கில் இளவரசர் ஆண்ட்ரூ நேரிடையாக பதிலளிக்கும் வகையில், ஜூலை 14ம் திகதி நீதிமன்றத்தில் பங்கேற்க வேண்டும் என நீதிபதி Lewis Kaplan தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ மீது அமெரிக்காவில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ள 38 வயது வர்ஜீனியா கியூஃப்ரே, தமது இள வயதில் இளவரசர் ஆண்ட்ரூ கட்டாயப்படுத்தி துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கினார் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறித்த சம்பவம் லண்டனில் நடந்துள்ளது எனவும், சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இச்சம்பவத்தில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், குறித்த வழக்கில் 61 வயதாகும் இளவரசர் ஆண்ட்ரூ மீது இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை. மட்டுமின்றி கியூஃப்ரேவின் குற்றச்சாட்டுகளை இளவரசர் மறுத்தும் வருகிறார்.
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பில் இளவரசர் ஆண்ட்ரூ பதிலளிக்க வலியுறுத்தி அக்டோபர் 29ம் திகதி காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் நீதிமன்றம் நவம்பர் 3ம் திகதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் எனவும், டிசம்பர் 15ம் திகதிக்குள் கியூஃப்ரே விரும்பினால் இந்த வழக்கில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்க நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது, இளவரசர் ஆண்ட்ரூ தரப்புக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.