ஜுன் 21-ஆம் திகதி பிரித்தானியாவில் ஊரடங்கு முடிவுக்கு வருமா? பிரதமர் போரிஸ் அளித்த பதில்
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் புள்ளி விவரங்கள் இன்னும் தெளிவற்றவையாக இருப்பதால், ஊரடங்கு குறித்த இறுதி முடிவை எடுக்க முடியாமல் இருப்பதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் இங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், வைரஸ் பரவல் குறைந்துள்ளது.
இருப்பினும், அரசு வரும் ஜுன் மாத கடைசிக்குள் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் குறைத்து, ஊரடங்குகளை தளர்த்திவிடலாம் என்று நம்பியிருந்தது.
அதன் படி வரும் ஜுன் மாதம் 21-ஆம் திகதி பிரதமர் போரிஸின் நான்காம் கட்ட ஊரடங்கு திட்டத்தில் இதன் அறிவிப்பு வெளியாகலாம் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
ஆனால், இங்கிலாந்தில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் இருக்கிறது.
இதனால் வரும் ஜுன் மாதம் 21-ஆம் திகதி பிரித்தானியாவில் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு, அதுமட்டுமின்றி விஞ்ஞானிகளும் அவசரப்பட வேண்டாம், ஊரடங்கை இன்னும் சில நாட்கள் நடைமுறையில் இருக்கலாம் என்று அறிவுறித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன், வரும் 21-ஆம் திகதி ஊரடங்கு முடிவுக்கு வருமா? என்பது குறித்து இறுதி முடிவை எடுக்க முடியாமல் இருப்பதாக கூறியுள்ளார். ஏனெனில் அதற்கு ஒரு தெளிவான புள்ளி விவரங்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இதற்கு மூன்று வாரங்கள் இருந்த போதிலும், கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருமா என்ற கேள்விக்கு அவர் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. ஆனால் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். அடுத்து என்ன நடக்கும் என்பதை ஓரளவு யூகித்து வைத்துள்ளோம்,
இந்த கொரோனா தடுப்பூசி திட்டம் எந்த அளவிற்கு நம்மை காத்துள்ளது என்பது குறித்து தெளிவான தரவுகள் இல்லாத காரணத்தினால் சற்று நான் பயப்படுகிறேன். அதே சமயம், விஞ்ஞானிகளும், சில நாட்கள் செல்லட்டும் என்று கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்பு இருந்ததை விட இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இப்போது கொரோனா வைரஸ் பரவல் அதாவது எட்டு மாதங்களுக்கு பின் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த மே 21-ஆம் திகதியுடைய வாரத்துடன் ஒப்பிடும் போது, 9,860 இறப்புகள் பதிவாகியிருப்பதாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்திருந்தது.
இதில், 1.1 சதவீதம்(107 பேர்) பேருக்கான இறப்புச் சான்றிதழில் கொரோனா வைரஸ் தான் இறப்புக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுவே கடந்த செப்டம்பர் 11-ஆம் திகதி இந்த இறப்பு விகிதம் 1 சதவீதமாக இருந்தது. இரண்டாவது அலையின் உச்சத்தில், அதாவது கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் திகதியுடைய வாரத்தில், இறப்பு விகிதம் 45.7 சதவீதமாக இருந்தது.
இப்போது அதனுடன் ஒப்பிட்டு பார்த்தால், இறப்பு விகிதம் முற்றிலும் குறைந்துள்ளது, கடந்த செவ்வாய் கிழமை கூட, பிரித்தானியாவில் கொரோனாவால் இறப்பு இல்லாத நாளாக பதிவாகியுள்ளது.
பிரித்தானியாவில், 39.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் முதல் டோஸை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.