கனேடிய பெண் அமைச்சரை மோசமாக திட்டிய நபர்! எப்படிப்பட்ட நாடாக இருக்க விரும்புகிறோம் என கொந்தளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மீதான வாய்மொழித் தாக்குதலுக்கு அரசியல் பிரமுகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்
நாம் எப்படிப்பட்ட நாட்டை கொண்டிருக்கிறோம் என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் - ஜஸ்டின் ட்ரூடோ
கனேடிய துணை பிரதமரும், நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்டை பொதுவெளியில் நபர் ஒருவர் மோசமாக திட்டியதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
அல்பெர்ட்டா நகரில் கனேடிய துணை பிரதமரும், நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் பயணம் மேற்கொண்டார். நகரின் வணிகர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர் பேசினார்.
பின்னர் சிட்டி ஹால் கட்டிடத்தின் லிப்ட்டிற்குள் அவர் செல்லும்போது, அங்கு வந்த நபர் ஒருவர் துணைப் பிரதமரின் பெயரைக் கூறி கத்தினார். மேலும் மோசமான வார்த்தைகளாக அவரை திட்டிய அந்த நபர், கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்டை துரோகி என குறிப்பிட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
PC: REUTERS/Blair Gable
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து பதிவிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், 'நேற்று நடந்தது தவறு. யாரும், எங்கும், அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை' என குறிப்பிட்டார்.
PC: Carlos Osorio/REUTERS
கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மீதான வாய்மொழித் தாக்குதலுக்கு அரசியல் பிரமுகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'பொது வாழ்வில் உள்ளவர்கள் மற்றும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினர் அல்லது பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் குரல்கள் அதிகளவில் வலிமை பெற்று வருவதால், இனவெறி கொண்ட கனேடியர்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம்.
நாம் ஒரு பின்னடைவைப் பார்க்கிறோம். நாம் எப்படிப்பட்ட நாட்டை கொண்டிருக்கிறோம் என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட நாடாக இருக்க விரும்புகிறோம் என்பதையும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்' என கண்டனம் தெரிவித்துள்ளார்.