இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு கனடாவிடம் வலுவான ஆதாரம் இல்லை: அந்தர் பல்டி அடித்த கனடா பிரதமர்
கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், தனது குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் தங்களிடம் இல்லை என தற்போது கனடா பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவுகள்
கனடா மற்றும் இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டு, சர்வதேச மாணவர்கள் அவதிக்குள்ளாகி, எதிர்காலத்தில் கனடாவில் கல்வி என்பது எப்படி இருக்குமோ என அச்சப்படுவதற்கு காரணமாக அமையும் வகையில் இந்தியா மீது குற்றம் சாட்டிய கனடா அரசு, தற்போது தடாலடியாக தங்களிடம் ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளது.
அந்தர் பல்டி அடித்த பிரதமர்
கனடாவின் உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் எங்கள் Five Eyes கூட்டாளர்கள் கொடுத்த தகவல்களின்பேரில்தான், நான் கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசின் ஏஜண்டுகள் இருப்பதாகக் கூறினேன் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
இந்தியாவால் தேடப்பட்டுவந்த குற்றவாளியும், காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அவரது கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார் ட்ரூடோ.
தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை மூலம் முடிக்க வேண்டிய விடயத்தை பெரிதாக்கியதால், இரு நாடுகளுக்குமிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நிஜ்ஜர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாகத் தெரிவித்த தனது குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் தங்களிடம் இல்லை என கனடா பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியா பதிலடி
Our response to media queries regarding PM of Canada's deposition at the Commission of Inquiry: https://t.co/JI4qE3YK39 pic.twitter.com/1W8mel5DJe
— Randhir Jaiswal (@MEAIndia) October 16, 2024
கனடா பிரதமர் தனது குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் தங்களிடம் இல்லை என ஒப்புக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம், சமூக ஊடகமான எக்ஸில் சுடச்சுட பதிலொன்றை அளித்துள்ளது.
இன்று நாங்கள் கேள்விப்படும் இந்த விடயத்தைத்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறோம், அது தற்போது உறுதியாகியுள்ளது.
இந்தியாவுக்கும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் எதிராக கூறிய குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலான எந்த ஆதாரத்தையும் கனடா எங்களிடம் அளிக்கவில்லை.
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தாங்கள் கூறுவதே சரி என்னும் வகையில் நடந்துகொண்ட கனடாவின் நடத்தையால் இந்தியா கனடாவுக்கிடையிலான உறவில் ஏற்பட்ட பாதிப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே காரணம் என கடுமையான பதிலை வெளியிட்டுள்ளது இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |