விமான நிலையத்துக்கு வரவேண்டாம்... பிரித்தானியாவின் ஆலோசனை: வேறொரு நாடு பக்கம் திரும்பும் ஆப்கானிஸ்தானியர்கள்
தாலிபான்களின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து தப்ப விரும்பி, காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோர் தஞ்சமடைந்துள்ளார்கள்.
ஆனால், நீங்கள் தப்பவேண்டுமானால் காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என பிரித்தானியா ஆப்கன் மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
அதாவது, காபூல் விமான நிலையத்தின் மீதே தாலிபான்களின் கவனம் இருப்பதால் வெளியேற விரும்பும் ஆப்கன் மக்கள் அங்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய பிரித்தானிய பாதுகாப்புத்துறை செயலரான Ben Wallace, ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு மூன்றாவது நாடு ஒன்றிற்கு தப்பிச்செல்லும் எண்ணம் இருக்குமானால், ஒரு சிறந்த வழி உள்ளது. அது காபூல் விமான நிலையத்திற்கு செல்வதற்கு பதில் அவர்கள் எப்படியாவது எல்லையைச் சென்றடைய முயற்சிப்பதாகும் என்கிறார்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானியர்களின் கவனம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது. ஏராளமானோர் பாகிஸ்தான் வழியாக தப்பலாம் என்று எண்ணி பாகிஸ்தான் எல்லைகளில் குவிந்துள்ளதை வெளியாகியுள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.
ஆனால், உலகில் எந்த பகுதியில் இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றாலும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாகிஸ்தானிலிருந்து, தற்போது எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
ஆம், அவர்கள் இங்கே வரவேண்டாம், இங்கே அதிக அகதிகளுக்கு இடமில்லை. ஏற்கனவே நாங்களே இங்கே கஷ்டத்தில் இருக்கிறோம், எங்கள் நிதி நிலைமை பாதிக்கும், அவர்கள் ஏன் இங்கே வருகிறார்கள் என பாகிஸ்தானியர் ஒருவர் கூறும் வீடியோ ஒன்று அதற்கு ஆதாரமாக வெளியாகியுள்ளது.