கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை
* கள்ளக்குறிச்சி மாணவியின் மரண வழக்கில் பகீர் கிளப்பும் ஆசிரியையின் தந்தை
* தன் மகளை தேவையின்றி இவ்வழக்கில் சிக்க வைத்துள்ளதாக புகார்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை என இவ்வழக்கில் கைதான ஆசிரியையின் தந்தை பகீர் கிளப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இதில், ஏ1 கிருத்திகா, ஏ2 ஹரிப்பிரியா, ஏ3 ரவிக்குமார், ஏ4 சாந்தி, ஏ5 சிவசங்கரன் என போலீசாரின் அறிக்கையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்களில் முதன்மையானவர்கள் யார்? துணை போனவர்கள் யார் என்ற அடிப்படையில் இவர்களை வரிசைப்படுத்தாமல் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் ஏ1, ஏ2 என்று சின்னசேலம் பொலிசார் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மாணவி ஸ்ரீமதியின் தாய் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவியின் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கணித ஆசிரியை கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ் விழுப்புரம் நீதிமன்றத்தில் அஃபிடவிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை தற்கொலையாக பள்ளி நிர்வாகம் ஜோடித்துள்ளது என்றும் தேவையின்றி இந்த வழக்கில் எனது மகள் கிருத்திகாவையும், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியாவையும் சிக்க வைத்துள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.
மேலும், மாணவி கொலை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று பிரபல செய்தி நிறுவனத்தை தனது மனுவில் ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.