கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்... நீதிமன்றம் புதிய உத்தரவு: முடிவடைந்த மறுகூராய்வு
சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மாணவியின் உடல் மறுகூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முடிவடைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் பெற்றோர் இல்லாமல் மறுகூராய்வு நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் ஆகியோர் சிறுமியின் உடலுக்கு மறுகூராய்வு முன்னெடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக ஜூலை 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞா்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடல் கூராய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யவும், உடல் கூராய்வு முழுவதையும் காணொளியாக பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன் ஆகியோர் முன்னிலையில் மாணவி உடல் இன்று மறுகூராய்வு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பெற்றோர் இல்லாமல் மறு உடல்கூராய்வு செய்யலாம் என அனுமதியளித்த நீதிபதி, பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.