நம்முடைய முதல் எதிரி! கடுமையான தண்டனை வேண்டும் - கமல்ஹாசன்
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.டி ஊழியர் கவின்குமாரின் படுகொலைக்கு நடிகர்,எம்.பி கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.டி ஊழியர் படுகொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த கவின்குமார் என்ற ஐ.டி ஊழியர், காதல் விவகாரத்தில் பாளையங்கோட்டையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, சுர்ஜித் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
மேலும், கவின்குமாரின் உறவினர்கள் சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கமல்ஹாசன் ஆதங்கம்
இந்நிலையில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இச்சம்பவம் தொடர்பில் தனது கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர், "பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐ.டி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும்.
சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-honor-killing-of-an-it-employee-is-shocking-kamal-haasan-1171438 |