கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் மர்மம்! நடிகர் கமல்ஹாசன் கண்ணீருடன் விடுத்த கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் மர்மம் நீடிப்பதாகவும், மாணவர்களின் மரணச் செய்தி இனிமேலாவது இல்லாதிருக்க வேண்டும் எனவும் கூறி நடிகர் கமல்ஹசன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சேலம், காஞ்சிபுரம் என ஆங்காங்கே மாணவ, மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்த விவகாரம் தொடர்பில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், 'தமிழக அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், ஊடகங்களுக்கும் கமல்ஹாசன் ஆகிய நான் கண்ணீருடன் விடுக்கும் கோரிக்கை இது.
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20ஆம் திகதி மட்டும், தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 28 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வேதனை அத்தோடு தீரவில்லை.
நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 20, 2022
தலைவர் கமல் ஹாசன் அவர்களின் கடிதம்!
(20/07/2022) pic.twitter.com/g1kKQYPw5f
கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில் நடந்த சம்பவங்களைப் பட்டியலிடுகிறேன். நீட் தேர்வால் நிஷாந்தி, முரளி கிருஷ்ணன், தனுஷ் ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மயிலாடுதுறையில் ரித்தீஷ் கண்ணா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஆகியோரும், போடியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, பாண்டமங்கலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் பரத்தும் தற்கொலை செய்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் மர்மம் நீடிக்கிறது. மேச்சேரி அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவியும், காஞ்சிபுரத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் இஷிகாந்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
imaphsy
பொதுத் தேர்வில் தோல்வி, நீட் தேர்வு பயம், பெற்றோர் கண்டிப்பு, ஆசிரியரின் அவமதிப்பு, காதல் விவகாரம், வறுமை என இந்தத் தற்கொலைகளுக்கான காரணிகள் வேறுபட்டாலும், சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் மனவலிமையை நம் பிள்ளைகள் மெல்ல இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் இது காட்டுகிறது' என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வேதனையையும், சில அறிவுரையையும் வழங்கியுள்ள அவர், தமிழக அரசு தற்கொலைத் தடுப்புப் படை ஒன்றை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நாளை வரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச் செய்தி இல்லாதிருக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.