கனடாவில் தந்தையின் கொலை வழக்கில் தொடர்புடையவர் யார் என தெரிய வந்ததால் மகளுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி
கனேடிய நகரம் ஒன்றில் மாயமான பல்கலை ஊழியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவரது நெருங்கிய நண்பருக்குத் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து, அவரது மகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
Kamloopsஐச் சேர்ந்த முகமது அப்துல்லா (Mohd Abdullah -60), Thompson River பல்கலையில் கணினி அறிவியல் துறையில் 21 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஆவார்.
இம்மாதம் (மார்ச்) 11ஆம் திகதி திடீரென மாயமானார் அப்துல்லா. 17 ஆம் திகதி வாகனம் ஒன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியான Rogelio Butch Bagabuyo (54) என்பவர், அப்துல்லாவின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் அப்துல்லா கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தன் தந்தை கொல்லப்பட்ட தகவல் அறிந்த பிலிப்பைன்சில் வாழும் அப்துல்லாவின் மகளான சாரா (Sarah Jeet Lalata-Buco), Rogelio தன் தந்தையின் நெருங்கிய நண்பர் என்று தெரிவித்துள்ளார்.
தன் தந்தைக்கு எந்த சட்ட உதவி வேண்டுமானாலும் அவர் Rogelioவின் உதவியைத்தான் நாடுவார் என்றும், அவருக்கு தன் தந்தையின் மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால், தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகவும் சாரா தெரிவித்துள்ளார்.
பொலிசார் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.