ஈழத்தமிழ் அரசியலை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது- பிரபல தொழில் அதிபர் கடும் ஆவேசம்!!
எனக்கு அரசியலுக்கு வர வேண்டிய தேவையும் இல்லை. அது எனது நோக்கமும் இல்லை. ஆனால் இங்கு இருக்கக்கூடிய அரசியலை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது என ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு கூறிய அவர், சரியான பாதையிலே பயணிக்க கூடிய, இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்க கூடிய ஒரு இளைய சமுதாய கட்டமைப்பு உருவாக வேண்டும். அதிலிருந்தே அடுத்த அரசியலை முன்னகர்த்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “ எமது இனத்தை வழிநடத்தக் கூடிய தலைமைகள் இன்று இந்த மண்ணில் இல்லை. குறிப்பாகச் சொன்னால் 2009 ஆம் ஆண்டு வரை ஒரு பெயருக்காக ஒரு இனம் நேர்கோட்டில், நிதானமாக, கட்டுகோப்புடன் பயணித்தது.
ஆனால் 2009 இற்கு பின்னர், இது பலகோணங்களில் சிதறுண்டு போயிருக்கிறது. இதை ஒரு வரையறைக்குள் வைத்து வழிநடத்தக் கூடியது அரசியலாக தான் இருக்க முடியும். வேறு எதனாலும் இதை வழிநடத்த முடியாது. ஆனால் அதனை வழிநடத்தக்கூடிய அரசியல் தலைவர்கள் இங்கு இல்லை.
இன்று இருக்க கூடிய அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியமானது. ஆனால், அத்தனை அரசியல் கட்சிளைச் சார்ந்தவர்களும் தாம் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
இங்கே பத்து பேர் தலைவர்களாக இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. தலைவன் என்பவன் தனித்துவமானவனாக, ஒருவனாக இருக்க வேண்டும். அவனோடு சேர்ந்து பயணிக்கக் கூடியவர்கள் சரியாக இருப்பார்களேயானால் ஒரு சரியான அரசியல் கட்சியை உருவாக்க முடியும்.
ஆனால் தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகளை வைத்துக்கொண்டு, அப்படி ஒரு கூட்டு முயற்சி எடுத்து ஒருவரை தலைவராகக் கொண்டு வந்து அரசியலை முன்னகர்த்துவதற்கான சாத்தியங்கள் கிடையவே கிடையாது” என அவர் கூறியுள்ளார்.