போட்டியில் தோற்றாலும் கேப்டன் கேன் வில்லியம்சனை தொடரும் சோதனை - என்ன தெரியுமா?
ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி தோற்ற நிலையில் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இப்போட்டியில் 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது.
இப்போட்டியில் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தை அடித்து ஆட வில்லியம்சன் முயன்றபோது அது பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. கீப்பிங்கில் நின்றிருந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் டைவ் அடித்து ஒற்றை கையால் பந்தை பிடித்தார். ஆனால் பந்து நழுவ ஸ்லிப்பில் நின்ற தேவ்தத் பட்டிக்கல் டைவ் அடித்து பிடித்தார்.
பந்து தரையில் பட்டதுபோல இருந்ததால் அது உண்மையில் அவுட் தானா என சந்தேகம் எழ நீண்ட யோசனைக்குப்பின் அவுட் என 3வது நடுவர் தீர்ப்பளித்தார். இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கேப்டன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இதே அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.