உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து! தரவரிசையில் முதலிடம் பிடித்த கேப்டன் கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் கடந்த வாரம் சவுத்தாம்ப்டனில் நடந்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல, தனது அணியை வழிநடத்திய பின்னர் ஐ.சி.சி வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தை மீட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 30 வயதான கேன் வில்லியம்சன் பெற்றுக் கொண்ட 49 மற்றும் 52 ஓட்டங்கள் 900 புள்ளிகளை கடக்க வழிவகுத்தது.
இப்போது அவர் ஸ்டீவ் ஸ்மித்தை விட (891 மதிப்பீட்டு புள்ளிகள்) கூடுதலாக 10 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு வந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது 2015 நவம்பரில் முதன்முதலில் ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை கேன் வில்லியம்சன் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.