இறந்த பிறகும் நெகிழவைக்கும் செயலை செய்த புனித் ராஜ்குமார்!
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்த பிறகு உலகத்தை பார்க்கும் வகையில் அவர் தனது கண்களை தானம் செய்துள்ளார்.
சாண்டல்வுட் (கன்னட திரையுலகம்) பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது. மேலும், கன்னட திரையுலகை மட்டுமில்லாது, அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் புனித்துக்கு வீட்டிலேயே லேசாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 3 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுது. ஆனால் புனித் சிகிச்சை பலனின்றி சில மணிநேரங்களில் காலமானார்.
புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மறைந்த புனித் ராஜ்குமார் பல்வேறு உதவிகள் செய்து வந்துள்ளார். தனது சொந்த செலவில் பள்ளிகளை நடத்தி ஏழை, எளிய குழந்தைகளுக்கு கல்வியை வழங்கிவந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், அவர் இறந்த பின்னரும் அவர் செய்த புனிதமான செயல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவர் தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார். அவரது கண்கள் பெங்களூரூவில் உள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்பட்டது.
Puneeth Rajkumar follows in his father's footsteps, donated his eyes.#Respect pic.twitter.com/HuWx4Mcphl
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 29, 2021
புனித்தின் தந்தை நடிகர் ராஜ்குமாரும் அவரது கண்களை தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் அவரது மகன்கள், 'ராஜ்குமார்' பெயரில் அறக்கட்டளை தொடங்கியது மேலும் குறிப்பிடத்தக்கது.