‘காப்போம் தமிழ்’போட்டித் தொடர் விபரம் வெளியீடு - பங்குபற்றுபவர்களுக்கு வெளியான அறிவிப்பு
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பதற்கிணங்க தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழை வளர்க்கும் செயற்பாடுகளை புலம்பெயர் தமிழர்கள் செய்துவருகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானியாவில் "காப்போம் தமிழ்" என்னும் தொனிப்பொருளில் போட்டி நிகழ்ச்சி ஒன்றை நாடுதழுவிய ரீதியில் நடத்துவதற்கு அதன் ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் விடுத்திருக்கும் அழைப்பில்:
எமது தமிழ் மொழியையும் எம் இனத்தின் தொன்மை மிகு வரலாற்றையும் எம் பாரம்பரியத்தையும் எம் இளையோரின் மத்தியில் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்குடன் "காப்போம் தமிழ்" முன்னெடுக்கும் இந்த பணியில் பயணிப்பதில் பேருவகை கொள்கிறோம்.
"காப்போம் தமிழ்" மொழி மற்றும் கலைத்திறன் போட்டித்தொடரில் பங்கு பற்ற விண்ணப்பித்ததன் மூலம் நீங்கள் ஒரு தமிழ் மொழிப் பற்றாளராக மாபெரும் வரலாற்றுக் கடமையினை முன்னெடுத்துள்ளீர்கள் என்பது வரவேற்புக்குரியது.
காப்போம் தமிழ் போட்டித்தொடரின் போட்டிகள் பற்றிய விபரங்கள் உங்கள் கவனத்திற்கு வருமாறு,
எமது முயற்சியில் உங்கள் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் காப்போம் தமிழ் முதலாவது போட்டித்தொடரின் முதல் சுற்று போட்டிகளை நாம் பிரித்தானியா முழுவதும் ஏறத்தாழ பத்து நிலையங்களில் நடாத்த திட்டமிட்டிருந்த போதிலும் சில பிரதேசங்களில் இருந்து மிகக்குறைந்த விண்ணப்பங்களே எமக்கு கிடைத்திருப்பதன் காரணமாக முதல் சுற்று போட்டிகளை இரண்டு நிலையங்களாக்கி நடாத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இது ஏதேனும் வகையில் அசௌகரியங்களை ஏற்படுத்துமாயின் சூழ்நிலை உணர்ந்து உங்கள் ஒத்துழைப்பினை தந்து பொறுத்தருளுமாறு முதற்கண் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
அந்த வகையில் முதல் சுற்றுக்காக பின்வரும் போட்டி நிலையங்களும் திகதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
1) Coventry Centre ( கொவன்றி நிலையம்) - இலண்டனுக்கு வெளியிலான பிரதேச விண்ணப்பதாரிகளுக்கானது.
முதல் சுற்று போட்டி திகதி : 05/03/2022 சனிக்கிழமை முகவரி : Coventry Tamil Welfare Association. Clifford House 38-44 Binley Rd, Coventry CV3 1JA 2) Croydon Centre (குரொய்டன் நிலையம்) - இலண்டன் மற்றும் சூழவுள்ள பிரதேச விண்ணப்பதாரிகளுக்கானது.
முதல் சுற்று போட்டி திகதி : 19/03/2022 சனிக்கிழமை முகவரி : Croydon Metropolitan College, 30-32 South End, South Croydon, Surrey. CR0 1DN மேற்குறிப்பிடப்பட்ட இரு நிலையங்களிலும் பின்வரும் பிரதேச விண்ணப்பதாரிகள் உள்ளடக்கப்படுவர்.
நீங்கள் விண்ணப்பத்தின் போது தெரிவு செய்த நிலையத்தின் அடிப்படையில் இரண்டு நிலையங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Coventry நிலையம் உள்ளடக்கும் பிரதேசங்கள் : Coventry, Milton Keynes, Sheffield, Stoke on Trent
Croydon நிலையம் உள்ளடக்கும் பிரதேசங்கள் : London North, London South, London East, London West, Lewisham. இரண்டு நிலையங்களிலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் போட்டிகள் காலை 9 மணி முதல் ஆரம்பமாகும்.
போட்டியாளர்களுக்கு போட்டிக்கான நிகழ்ச்சியானது மூன்று நிமிடங்களுக்கு குறையாமலும் ஐந்து நிமிடங்களுக்கு கூடாமலும் இருத்தல் வேண்டும்.
போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடைபெறும்.முதல் சுற்று முடிந்து பின்னர் தெரிவாகும் போட்டியாளர்கள் இரண்டாம் சுற்றிலும் இரண்டாம் சுற்றில் தெரிவாகும் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றிலும் போட்டியிடுவர்.
வெற்றியாளர்கள் அனைவருக்கும் நாம் ஏலவே அறிவித்தது போல மாபெரும் பணப்பரிசில்களும் பங்கு பற்றும் அனைவருக்கும் சான்றிதழ்களும் காத்திருக்கின்றன.
முதலாம் சுற்று போட்டிகள் முடிவடைந்ததன் பின் அடுத்தடுத்த சுற்றுக்கள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும். அத்துடன் முதல் சுற்று தொடக்கம் அனைத்து போட்டியாளர்களும் பிரித்தானியாவின் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஊடகம் ஐ.பி.சி தமிழ் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
அதனால் போட்டியாளர்கள் ஏற்கனவே போட்டி நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டது போல தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியதன் முக்கியத்துவத்தை இத்தால் மீள வலியுறுத்துகிறோம்.
நடுவர்கள் எக்காரணம் கொண்டும் பக்கச் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தும் நாம் தகுதியானவர்களை நடுவர்களாக நியமிக்க எம்மாலான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுக்கிறோம்.
எனவே நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதனை அனைவரும் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். அதேவேளை போட்டியாளர்கள் முதலாவது சுற்றில் போட்டியிடும் போது பார்வையாளர்களோ போட்டியாளர்களின் பெற்றோர்களோ அல்லது வேறு எந்த மூன்றாம் நபரோ போட்டிக்கான அறையினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
போட்டிக்காக ஒதுக்கப்பட்ட அறையினுள் நடுவர்களும் போட்டியாளர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டி ஒருங்கிணைப்பாளர்களும் தொழிநுட்பவியலாளர்களும் போட்டிகளின் தேவை கருதி அனுமதிக்கப்படுவர்.
போட்டிகளின் போது போட்டியாளர்களுடன் தொடர்புடையோர் நடுவர்களுடன் கலந்துரையாடுவதை போட்டிகளின் நடுநிலை தீர்ப்பு கருதி தவிர்க்குமாறும் இத்தால் தெரிவிக்கிறோம்.
போட்டி பற்றிய விபரங்களுக்கான இணைய இணைப்புகள் வருமாறு :
1) பொது விதிகள் மற்றும் நிபந்தனைகள் : https://kaappomthamizh.com/about-the-competition-tamil/https://kaappomthamizh.com/terms-and-conditions-tamil/
2) பேச்சு போட்டிக்கான விதிகள் மற்றும் தலைப்புக்கள்: https://kaappomthamizh.com/speech-competition-tamil/
3) நடனப்போட்டிக்கான விதிகள் : https://kaappomthamizh.com/dance-competition-tamil/
4) பாடல் போட்டிக்கான விதிகள்: https://kaappomthamizh.com/singing-competition-tamil/
மேலதிக விபரங்கள் www.kaappomthamizh.com அல்லது www.savetamil.com எனும் இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
மாபெரும் வெற்றியை நோக்கிய உங்கள் பிள்ளைகளின் பயணம் சிறப்புற அமைய வாழ்த்துகிறோம். உங்கள் பயணம் எம்மோடு வெற்றிப் பயணமாக திகழ இத்தால் கரம் கோர்க்கிறோம். விரைவில் சந்திப்போம்.
இப்படிக்கு,
காப்போம் தமிழ் குழுமம்