அமேசான், ஸ்விக்கி நிறுவனங்களின் உணவு உரிமங்களை இடைநிறுத்திய கர்நாடகா
Karnataka suspends food licences of Amazon, Swiggy: கர்நாடகாவில் அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்கள் இடைநீக்கம்.
நச்சுத்தன்மை வாய்ந்த ஊமத்தையை ஒன்லைனில் விற்பனை செய்ததைத் தொடர்ந்து, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை கர்நாடகா இடைநீக்கம் செய்துள்ளது.

மனித நுகர்வுக்காக நச்சுத்தன்மையுள்ள ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளை ஒன்லைனில் விற்பனை செய்ததன் காரணமாக, கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்கள் மற்றும் பதிவுகளை மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், மூன்று மின் வணிகத் தளங்கள், ஊமத்தை தொடர்பான அனைத்துப் பட்டியல்களையும் விளம்பரங்களையும் உடனடியாக நீக்குமாறும், அதனை ஒரு உணவுப் பொருளாக விற்பனை செய்வதையும் விநியோகிப்பதையும் நிறுத்துமாறும் அத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) பதிவு அல்லது உரிம எண்களைப் பயன்படுத்தி, மின்னணு வர்த்தகத் தளங்கள் வாயிலாக ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகள் சேமித்து விற்கப்படுவதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளின்போது கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் தீர்ப்பளிக்கும் அதிகாரியின் முன் ஆஜரானார்கள்.
நடைபெற்ற நடவடிக்கைகளின்படி, அந்த அறிவிப்புக்கு அமேசான் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. துறையின் அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஸ்விகி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) கூடுதல் அவகாசம் கோரியது.
இதனிடையே, ஊமத்தை விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், விற்பனை முறையை மாற்றிவிட்டதாகவும் பிக்பாஸ்கெட் அதிகாரிகளிடம் தெரிவித்தது. மேலும், மனித நுகர்வுக்கு அல்ல என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில் அதன் லேபிளிங் மாற்றப்படும் என்றும் அது கூறியது.
இருப்பினும், ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளின் நச்சுத்தன்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, பெறப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று அந்தத் துறை தெரிவித்தது.
அத்துடன், வர்த்தகத் தளங்களுக்கு இதுபோன்ற பொருட்களை வழங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் அவர்களின் உணவு உரிமங்கள் மற்றும் பதிவுகளை இடைநீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனங்கள் மற்றும் மின்னணு வர்த்தகத் தளங்கள் ஆகியவை இந்த அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று துறை தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறினால், பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் மேல்நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வுகளின்போது, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளைக் கொண்ட, உணவுப் பதிவு எண்கள் பொறிக்கப்பட்ட பொதிகளைக் கண்டறிந்தனர்.
மேலும், இப்பொருட்கள் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும், இணையவழி வணிகத் தளங்கள் மூலம் விற்பனை அல்லது விநியோகம் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |